×
 

என்ன மக்களே.. ஜல்லிக்கட்டு பார்க்க ரெடியா..!! பாலமேடு, அலங்காநல்லூரில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடத்தப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டும் அதன்படி, பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு வரும் 16-ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. பாலமேடு பகுதியில், மஞ்சமலை சுவாமி ஆற்றங்கரை திடலில் போட்டிக்கான அரங்கம் தயார் நிலையில் உள்ளது. இங்கு வாடிவாசல் அமைப்பு, பார்வையாளர்களுக்கான உயரமான மாடங்கள், மற்றும் இரு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் போன்றவை முழுமையாக நிறுவப்பட்டுள்ளன.

இதுதவிர, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார். இதனால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொங்கல் விழா... சீறும் காளை... மதுரை ஜல்லிக்கட்டு போட்டி தேதி அட்டவணை வெளியீடு...!

அதேபோல, அலங்காநல்லூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கோட்டைமுனி சாமி திடலில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிவாசல், இரும்பு தடுப்புகளுடன் கூடிய பார்வையாளர் மேடை, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான சிறப்பு இருக்கை ஏற்பாடு, மற்றும் இரு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் உள்ளிட்டவை தயாராகி வருகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இரு இடங்களிலும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள், அடக்குபவர்கள், மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், போலீஸ் துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ வசதிகள், அவசர உதவி குழுக்கள், மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவை முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரத்தையும், காளைகளுடனான உறவையும் வெளிப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டு. இந்நிகழ்ச்சிகள் உலக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான காளைகள் மற்றும் அடக்குபவர்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டத்தின் உச்சமாக இது அமையும் என்பதால், உள்ளூர் மக்களிடையே உற்சாகம் நிலவுகிறது.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... ஒருதலைப் பட்சமா நடக்குறீங்க..! முகூர்த்தக்கால் நடும் விழாவில் அமைச்சர் மூர்த்தியிடம் வாக்குவாதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share