துணைவேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பிய ஜனாதிபதி... தமிழக அரசுக்கு செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்...!
பல்கலைக்கழக விவகாரத்தில் மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பிய நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப் பெருந்தகை வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக் கழக சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை வேந்தரான ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. அதில் பல்கலைக் கழக சிண்டிகேட் நிதிச் செயலாளரை உறுப்பினராக சேர்ப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டிருந்தன.
தமிழ்நாடு சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி அதற்கு ஒப்புதல் தராமல் மூன்றாண்டுகள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், சென்னை பல்கலைக் கழக மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பியுள்ளார். இதன்மூலம் இந்த சட்ட திருத்த மசோதா அமலுக்கு வராத நிலை உருவாகி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் தெலுங்கானாவில் பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசு தான் நியமிக்கிறது என்றும் குஜராத் மாநிலத்திற்கு இருக்கிற உரிமை தமிழ்நாடு அரசுக்கு ஏன் மறுக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காந்தி பெயர் நீக்கம்: சர்ச்சைக்குரிய 'VB-G RAM G' மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!
மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுகிற பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கிற அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு வழங்காமல் ஆளுநருக்கு வழங்க முற்படுவது, அதற்கு குடியரசுத் தலைவர் இசைந்து போவது ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்... பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு...!