×
 

ராஷ்டிரபதி பவனில் ராஜாஜி சிலை... குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) அவர்களின் மார்பளவுச் சிலையை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலான பாரத ரத்னா சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் அவரது மார்பளவு சிலையை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார். காலனித்துவ ஆதிக்கத்தின் எச்சங்களை அகற்றி, இந்திய மண்ணின் மைந்தர்களைக் கௌரவிக்கும் மத்திய அரசின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராஷ்டிரபதி பவனில் உள்ள அசோக் மண்டபத்தின் அருகே உள்ள 'கிராண்ட் ஓபன் ஸ்டேர்கேஸ்' பகுதியில், இதுவரை இருந்த பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்டியன்ஸின் சிலைக்குப் பதிலாக ராஜாஜியின் சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. காலனித்துவ மனப்பான்மையின் சுவடுகளை ஒழித்து, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தியாகம் செய்த வீரர்களைப் பெருமையுடன் போற்றும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, எஸ். ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் எல். முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், ராஜாஜியின் குடும்ப உறுப்பினர்களும் கௌரவ அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

சுதந்திரப் போராட்ட வீரர், சிறந்த ராஜதந்திரி மற்றும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா பெற்ற முதல் மூவரில் ஒருவர் எனப் புகழப்படும் ராஜாஜியின் சிலை, நாட்டின் தலைமை மாளிகையில் நிறுவப்பட்டது அவருக்குச் செய்யப்பட்ட மாபெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

தன்னிகரற்ற அரசியல் மேதையான ராஜாஜியின் சிலை ராஷ்டிரபதி பவனில் இந்திய கலாச்சாரப் பெருமையின் அடையாளமாக இனித் திகழும் என விழாவில் உரையாற்றிய தலைவர்கள் குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: பெண்கள் மற்றும் இளைஞர்களே நாட்டின் பலம்! குடியரசு தின உரையில் திரௌபதி முர்மு பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share