×
 

தணியாத பதற்றம்.. 48 மணி நேரத்தில் 3வது மீட்டிங்.. முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை..!

பாகிஸ்தான் விவகாரத்தில் முப்படைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனைகள் மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதனால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களிலும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது. ஆனால், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் மூலம் இந்தியா முறியடித்தது. 

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய ராணுவம் லாகூர், கராச்சி நகரங்களில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா எடுத்த சமரச முயற்சிகளால், இந்திய, பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் போனில் பேச்சு நடத்தினர். 

இதையும் படிங்க: இன்னமும் நீடிக்கும் ரெட் அலர்ட்.. மக்களுக்கு பறந்த உத்தரவு.. ஜம்மு - காஷ்மீரின் தற்போதைய நிலை தெரியுமா?

பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்தது. சண்டை நிறுத்தத்தை மீறி இரவு 9 மணிக்கு  ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் நகரங்களில்  பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 

இந்திய ராணுவம் அவற்றை வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.  இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்ட நிலையில்,  நேற்றிரவு 10.30 மணிக்கு மேல் எந்த தாக்குதலையும் பாகிஸ்தான் நடத்தவில்லை. இதை இந்திய ராணுவமும் உறுதி செய்தது. சண்டை முடிவுக்கு வந்த நிலையில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டில்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி அவரது இல்லத்தில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். எல்லையில் தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சக்ஸஸான "ஆபரேஷன் சிந்தூர்".. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share