கோயில், மடங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
கோயில் மற்றும் மடத்திற்குச் சொந்தமான நிலங்களைத் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
"கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களைத் தனிநபர்கள் பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீகச் சின்னங்களாக விளங்கும் திருக்கோயில்கள் மற்றும் ஆதீன மடங்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பழமைவாய்ந்த மடங்கள் மற்றும் கோயில்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்கள், போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களின் பெயர்களுக்குத் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய நில மோசடிகளால் ஆன்மீக மற்றும் தொண்டு நிறுவனங்களின் சொத்துக்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படுவது மிகுந்த வேதனையளிப்பதாக வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு தினத்தில் குவிந்த வருமானம்.. பத்திரப்பதிவில் ரூ.172 கோடி வசூல்!! அடேங்கப்பா..!!
கோயில் மற்றும் மடங்களின் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்யும்போது, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட மடங்களின் தடையின்மைச் சான்றிதழை (NOC) கட்டாயமாக்க வேண்டும். போலி ஆவணங்களை உருவாக்கி மடத்து நிலங்களை ஆக்கிரமிக்கும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பழமைவாய்ந்த மடங்கள் மற்றும் கோயில்களின் சொத்துக்களை முழுமையாக அளவீடு செய்து, அவற்றை டிஜிட்டல் மயமாக்கி ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க அரசு உடனடி நடவடிக்கைகளை முடுக்கவிட வேண்டும் எனத் தனது அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோயில் மற்றும் மடங்களின் சொத்துக்கள் என்பது மக்கள் வழங்கிய கொடையாகும்; அவற்றை எதிர்காலத் தலைமுறைக்காகப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமை என வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் நிறைவாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!