"பூர்ண சந்திரன் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை" - மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி..!!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயிரிழந்த பூர்ண சந்திரனின் மரணம் முதல்வர் ஸ்டாலினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலை என மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், திமுக அரசு அதனைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறி இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தால் மனவேதனை அடைந்த மதுரையைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் சில தினங்களுக்கு முன் தீக்குளித்து உயிரிழந்தார். அவரது வீட்டிற்கு நேரில் சென்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், பூர்ண சந்திரனின் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன் மாணிக்கவேல் கூறியதாவது: "தீபம் ஏற்றாததைக் கண்டித்து பூர்ண சந்திரன் தீக்குளித்ததை உலகெங்கும் இருக்கும் இந்துக்களுக்கான தியாகமாகப் பார்க்க வேண்டும். தான் தற்கொலை செய்துகொள்வதாக அவர் எவ்வித பதட்டமுமின்றி தெளிவாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மத உரிமைக்காக ஒரு இந்து தீக்குளித்த முதல் சம்பவம் இதுதான். பூர்ண சந்திரனின் தந்தை மற்றும் சகோதரன் திமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக இருக்கும் நிலையில், ஒரு தீவிர திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரைப் பார்க்கக் கூட யாரும் வரவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பொதுநலத்திற்காக இறந்த இவரைப் புறக்கணிப்பது ஏன்? இது தற்கொலை அல்ல, முதலமைச்சரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.
இதையும் படிங்க: தெலங்கானாவில் அதிர்ச்சி! வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 7 வயதுச் சிறுமி சடலம்!
தமிழகத்தில் காவல்துறை இன்று திமுக, அதிமுக என இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. சட்டத்தைப் பாதுகாப்போம் எனச் சத்தியப் பிரமாணம் எடுத்த போலீசார், இன்று அரசின் கைதிகளாக உள்ளனர். நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு, அதற்கு எதிராக அரசு என்ன சொன்னாலும் அது செல்லாது. சட்டத்திற்குப் புறம்பான வாய்மொழி உத்தரவுகளை ஏற்க முடியாது என்று தைரியமாகச் சொல்லி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியிருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் அதிகாரிகளே கிடையாது. ஓட்டு வங்கி அரசியலுக்காகத் தமிழகத்தில் இந்து அடையாளத்தை அழிக்கத் தொடங்கிவிட்டனர். இதற்குப் பாடம் புகட்ட வரும் தேர்தலில் திமுகவிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்.
இறந்த பூர்ண சந்திரனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக அரசிடம் பிச்சை எடுக்க நான் விரும்பவில்லை. அந்தக் குழந்தைகளின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகத் தனி வங்கி கணக்கு தொடங்கி, உலகெங்கும் உள்ள இந்துக்களின் உதவியைப் பெற்றுத் தருவேன். தமிழக மக்கள் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துகின்றனர். அதில் 121 கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் கையாடல் செய்து தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர்," என்று அவர் மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #Breaking: கோவை மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் - ஆட்டு வியாபாரியை கொன்றதாக குற்றவாளிகள் வாக்குமூலம்!