"பணம் தான் விரயமாகும்"..! புதிய தலைமை செயலகம்..! கிருஷ்ணசாமி எதிர்ப்பு..!!
புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படுவதை கிருஷ்ணசாமி எதிர்த்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய கட்டட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தற்போது தலைமைச் செயலகம் இயங்கி வரும் புனித ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி உள்ளதாகவும், பாதுகாப்பு மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எதிர்கால நிர்வாகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பசுமைக் கட்டட தரநிலைகள், தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றுடன் இந்த வளாகம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்கள் வரலாற்று மரபுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.இந்த அறிவிப்பு வெளியான உடனேயே எதிர்க்கட்சித் தரப்பிலும் பல்வேறு கட்சித் தலைவர்களிடமும் விமர்சனங்கள் எழுந்தன.
அவற்றில் குறிப்பிடத்தக்கது புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் கருத்து. தவெகவின் வாக்குறுதி நிறைவேற்றம், ஏழை மக்களுக்கு சொந்த வீடு உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகள் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில், உடனடித் தேவையற்ற தலைமைச் செயலகக் கட்டுமானத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்குவது அவசியமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது! டெல்லியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி!
தலைநகரை மாநிலத்தின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சூழலில், சென்னையில் இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது வரிப்பணத்தை விரயமாக்கும் செயலாகும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தின் புவியியல் மையத்தில் தலைநகரை மாற்றுவதன் மூலம் நிர்வாகச் சமநிலை ஏற்படும் என்ற நீண்டகால கோரிக்கையை சுட்டிக்காட்டி, தற்போதைய திட்டம் அந்த திசையில் செல்லாமல் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: இந்தியா, சீனா, அமெரிக்கா என யாரிடமும் இழப்பீடு கேட்கவில்லை! ஒத்துழைப்பை கேட்கிறோம்! நேபாளம் திடீர் விளக்கம்!