காயிதே மில்லத் 131-வது பிறந்தநாள்: தமிழை வளர்க்க அன்புமணி ராமதாஸ் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் தமிழை வளர்க்கவும், மதநல்லிணக்கம் காக்கவும் உறுதியேற்போம் எனப் பாமக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிர்ணய அவையின் (Constituent Assembly) முன்னாள் உறுப்பினருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் 131-ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் காயிதே மில்லத் அவர்களின் சேவைகளை நினைவு கூர்ந்து, சமூக ஒற்றுமைக்கான முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்குப் பின் நாட்டை வடிவமைப்பதிலும் முக்கியப் பங்காற்றிய கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-ஆம் பிறந்தநாள் இன்று. தமிழ் மொழிக்கும், இந்தச் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் ஈடு இணையற்றவை ஆகும். நாடாளுமன்றத்திலும் அரசியல் நிர்ணய அவையிலும் அன்னைத் தமிழை இந்தியாவின் தேசிய ஆட்சிமொழியாக அரியணை ஏற்ற வேண்டும் என்று மிக உறுதியாகக் குரல் கொடுத்தவர் அவர்.
இதையும் படிங்க: "கண்ணிய தென்றல்"... காயிதே மில்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம்..!!
அவர் காட்டிய வழியில், அன்னைத் தமிழுக்கு உரிய அரியணையைப் பெற்றுத் தரவும், மக்கள் மத்தியில் என்றும் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் பேணிக் காக்கவும் இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்" என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் கள அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், சமூக நல்லிணக்கத்திற்கான பாமக தலைவரின் இந்த அறிக்கை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: காயிதே மில்லத்தின் 131வது பிறந்த நாள் இன்று..!! நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை..!!