"படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!
படிவம் 6ஐ ஞானேஷ் குமார் மாற்றி அமைத்தது உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான சர்ச்சை புதிய பரிமாணம் பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் இந்த மாற்றத்தைச் செய்துள்ளார் என்பது உறுதியாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
படிவம் 6 என்பது முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் குடிமக்கள் நிரப்பும் விண்ணப்பமாகும். எஸ்.ஐ.ஆர் பணியின் போது இதில் கூடுதல் அறிவிப்புப் பகுதி சேர்க்கப்பட்டது. புதிய விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் அல்லது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளின் பெயர் முந்தைய எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியலில் இருந்ததா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் முதல்முறை வாக்காளர்களாக, குறிப்பாக இளைஞர்களாக உள்ள பலருக்குப் பெயர் சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த மாற்றம் 1960 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளில் எந்தத் திருத்தமும் செய்யாமல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. படிவத்தை மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்றும், தேர்தல் ஆணையத்திற்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆணையத்தில் உள்ள மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் இந்த மாற்றத்தை ‘அங்கீகாரமற்றது’ மற்றும் ‘சட்டவிரோதமானது’ என்று பதிவு செய்துள்ளனர். அவர்கள் பல முறை ஆட்சேபனை தெரிவித்தபோதிலும், தலைமைத் தேர்தல் ஆணையர் தனியாக முடிவெடுத்து செயல்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திலும் விவாதத்திற்கு வந்தது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், படிவம் 6ல் செய்யப்பட்ட மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!
ஆனால் நீதிமன்றம் இதைத் தெளிவுபடுத்தியது. மாற்றப்பட்ட படிவத்திற்கு எந்த ஒப்புதலும் அளிக்கப்படவில்லை என்றும், யார் இந்த மாற்றத்தைச் செய்தார்கள் என்பதை ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்தத் தெளிவுபடுத்தலுக்குப் பிறகுதான் ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.அவர் சமூக ஊடகப் பதிவில், ஞானேஷ் குமார் சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் படிவம் 6ஐ மாற்றியுள்ளார் என்பது இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிவிட்டதாகக் குறிப்பிட்டார். இது பாஜகவுக்கு உதவும் வகையில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு மேலும் ஒரு சான்று என்றும், ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலுக்குக் காரணமான அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!