தொடர் அதிருப்தி..!! தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்கிறாரா ராகுல்காந்தி..?? தமிழக அரசியலில் பரபரப்பு..!!
ராகுல்காந்தி தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இதுவரை மூன்று முறை தமிழகம் வந்து பிரசாரம் செய்துள்ளார்.
மேலும், வரும் 15-ம் தேதி நாகர்கோவிலிலும், 18-ம் தேதி கோவையிலும் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்தக் கூட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளையில், ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
வரும் 15-ம் தேதி சேலத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், ராகுல் காந்தி தரப்பில் இருந்து இதுவரை சாதகமான பதில் வராததால் திமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் கேரள தேர்தல் தளம்..!! நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி..!!
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றபோதே சில பிரச்சினைகள் எழுந்தன. அப்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய காங்கிரஸ் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ராகுல் காந்தி இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது தாயார் சோனியா காந்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகே திமுகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
ராகுல் காந்தி தொடர்ந்து அதிருப்தியுடன் இருப்பதால், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒரே நாளில் பிரசாரம் செய்தபோதும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை.
வெவ்வேறு நேரங்களில் தனித்தனியே பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல், கேரளா தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை மற்றும் கோவைக்கு ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வந்தபோதும் தமிழகத்தில் எந்தப் பிரசார நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
தற்போது தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், ராகுல் காந்தி பிரசாரத்துக்கு வருவார் என்று கூறி வரும் நிலையில், மற்றொரு மேலிடப் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக் இதை உறுதிப்படுத்தவில்லை. இந்தச் சூழலில், ராகுல் காந்திக்கு நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் மூலம் அவரை அழைக்க திமுக தலைமை முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அப்பம், ஆம்லெட், புட்டுடன் ஒரு சுவையான மீட்டிங்..!! UDF தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை..!!