கூட்டணிக்கு நடுவில் கூடலூருக்கு வருகை தரும் ராகுல்! மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்!
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் ஜனவரி 13-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கூடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டத்தில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் அரை மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு, அவர் அங்கிருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஒருபுறம் பள்ளியின் பொன்விழா நிகழ்வு என்றாலும், மற்றொரு புறம் கட்சியின் வலுவான அரசியல் நகர்வுகளிலும் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 'கிராம கமிட்டி மாநாடு' ஒன்றைப் பிரம்மாண்டமாக நடத்தத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு ஜனவரி மாத இறுதியில் சென்னை அல்லது திருச்சியில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தியிடம் தேதி கேட்கப்பட்டுள்ள நிலையில், அவரது தரப்பில் இருந்து இன்னும் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை. தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், ராகுல் காந்தியின் வருகை கூட்டணிக்குள் கூடுதல் அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இடத் தேர்வு மற்றும் மேடை அமைக்கும் பணிகளைத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தற்போதே முடுக்கி விட்டுள்ளனர். பொங்கல் விடுமுறைக்குப் பிறகு ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ பயணத் திட்டம் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இதையும் படிங்க: "நோ ஒர்க் - நோ பே!" போராடும் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
இதையும் படிங்க: "இனி இஷ்டத்துக்கு கூட்டம் போட முடியாது!" பொதுக் கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தமிழக அரசு அதிரடி!