பைக் மீது லோடு வேன் மோதிய கோர விபத்தில் பெண் பலி... பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்.
சென்னை எழும்பூரில் இருசக்கர வாகனம் மீது லோடு வேன் மோதிய சம்பவத்தில் பெண் உயிரிழந்த நிலையில், பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் அதன் திருத்தங்களின் கீழ் அமல்படுத்தப்படுகிறது. சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், விபத்துகளில் தலைக் காயங்களைத் தவிர்ப்பதற்காகவும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி ஹெல்மெட் அணியாமல் சென்றால் போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமருபவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடையாளம் தெரியாத லோடு வாகன மோதி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் 46 வயதான ஸ்ரீதேவி. இவர் தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி போலீசாரம் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. தனது வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தியபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் சென்றுள்ளார்., அவர் சென்ற வாகனத்தின் வலது புறம் வந்த லோடு வேன் உரசி சென்ற போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் ஸ்ரீதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: பஞ்சாபில் கோர விபத்து: பேருந்தில் 40 பேர் பயணம்.. பரிதாபமாக போன 7 உயிர்கள்.. மற்றவர்களின் நிலை என்ன..?
தொடர்ந்து அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்னல் இருக்கும் இடத்தில் எப்படி சிசிடிவி இல்லாமல் போனது என உயிரிழந்த ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். தாங்கள் வரும்போது உடலை சாலையின் ஓரமாக போட்டு வைத்திருந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமலேயே அவர் இறந்து விட்டார் என்று கணித்துவிட்டார்கள் எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: 'எங்கேயும் எப்போதும்' பட பாணியில் கோர விபத்து.. மோதிக்கொண்ட பேருந்துகள்.. 40 பேர் பரிதாப பலி..!