அன்புமணி உரிமை கோரினால் எங்களையும் கேட்கணும்! ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்...
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முகுந்தன் பரசுராமன், ராமதாஸின் மகள்வழிப் பேரன். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன். பாமகவில் மாநில ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றி வந்த முகுந்தன், அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. கட்சியே இரண்டாக உடையும் சூழலுக்கு சென்ற நிலையில், ராமதாஸ் - அன்புமணி மோதலை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார். அப்போது தொடங்கிய பிரச்சினை இருவருக்கும் இடையே இன்னும் ஓயாத நிலை ஏற்பட்டுள்ளது.
தனித்தனியாக செயற்கூறு கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள், சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது பதினாறு குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வேண்டும் என்று இரண்டாவது முறையாகவும் கெடு விதிக்கப்பட்டிருந்தது. அப்படி அன்புமணி பதிலளிக்காத பட்சத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க: அடங்காத புகைச்சல்… அசராத அன்புமணி! விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பேச்சு
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணி தரப்பில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு உரிமை கோரியோ அல்லது சின்னத்துக்கு உரிமை கோரியோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமதாசால் நியமிக்கப்பட்டுள்ள பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வரும் 10ம் தேதி வரைக்கும்தான் டைம்! மீண்டும் அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்..!