ஒன்றரை ஆண்டுக்குப் பின் தந்தையை சந்தித்து கண்ணீர் மல்க ஆசி பெற்ற அன்புமணி.. தைலாபுரத்தில் நெகிழ்ச்சி!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான ஒன்றரை ஆண்டுக்கால மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. 61-வது திருமண நாளில் தைலாபுரம் தோட்டத்தில் தந்தை காலில் விழுந்து அன்புமணி ஆசி பெற்றார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் மற்றும் குடும்ப ரீதியிலான மோதல் போக்கு, இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான சந்திப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக மருத்துவர் ராமதாஸ் நியமித்ததில் இருந்து இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கட்சி பதவிகள், நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வரை பாமக இரு அணிகளாகச் செயல்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி அன்புமணி மாம்பழச் சின்னத்திலும், ராமதாஸ் ஆதரவாளர்கள் சுயேச்சைச் சின்னத்திலும் போட்டியிட்டனர். இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தனது தந்தையை நேரில் சந்திப்பதைத் தவிர்த்து வந்த அன்புமணி, ராமதாஸ் இல்லாத நேரத்தில் மட்டுமே தைலாபுரம் தோட்டம் சென்று தாயார் சரஸ்வதி அம்மாளைச் சந்தித்து வந்தார். கடந்த ஆண்டு ராமதாஸின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் விழாக்களையும் அவர் புறக்கணித்திருந்தார்.
இதையும் படிங்க: "டயலாக் பேசும் டம்மி முதல்வரே"..! கோவையில் கிடந்த பெண் சடலம்... தவெக அரசை விளாசிய திமுக..!
இந்த நிலையில், மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் 61-வது திருமண நாளான இன்று, அவர்களிடம் ஆசி பெறுவதற்காக அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு திடிரென வருகை தந்தார். அன்புமணியுடன் அவரது மனைவி சௌமியா, 3 மகள்கள், பேரன், பேத்திகள் மற்றும் அவரது கடைசி தங்கை கவிதா ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுக்கு வீட்டின் பணியாளர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகனைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்ட மருத்துவர் ராமதாஸ், அன்புமணியைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதார். தந்தையைக் கண்டு அன்புமணியும் கலங்க, இருவரும் சுமார் 3 நிமிடங்களுக்கும் மேலாகக் கண்ணீர் மல்க பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நெகிழ்ச்சியான காட்சியைக் கண்டு குடும்பத்தினர் அனைவரும் கண்ணீர் விட்டனர். பின்னர், தந்தையை ஆசுவாசப்படுத்திய அன்புமணியும், சௌமியாவும் ராமதாஸின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். பேரன், பேத்திகளை அரவணைத்து ராமதாஸ் கொஞ்சி மகிழ்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். அன்புமணியின் குடும்பத்தினருக்கு ராமதாஸ் தரப்பில் சைவ மற்றும் அசைவ உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு நீண்ட நேரம் பழைய நினைவுகளைப் பேசி மகிழ்ந்த இந்த குடும்பச் சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. பின்னர், தந்தை மற்றும் தாயிடம் விடைபெற்றுக்கொண்டு அன்புமணி குடும்பத்துடன் சென்னைக்குப் புறப்பட்டார்.
தோட்டத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், "திருமண நாளில் தந்தை, தாயிடம் ஆசி பெற்றேன். இனி எல்லாம் நல்லதே நடக்கும்" என்று சுருக்கமாகப் பதிலளித்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருந்த மோதல் போக்கு தற்பொழுது சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளதால், மிக விரைவில் இருவரும் இணைந்து கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "தாய் நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்"..! மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!