×
 

மீண்டும் மீண்டும் அராஜகம்.. ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் மற்றும் ஒரு படகை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டப்படும் இந்திய மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அடிக்கடி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுகின்றனர். 2025ம் ஆண்டு மட்டும், இதுவரை 17 முறை கைது சம்பவங்கள் நடந்துள்ளன, இதில் நூற்றுக்கணக்கான மீனவர்களும் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அரசு, 2018 இல் கொண்டுவந்த கடல் எல்லைச் சட்டதிருத்தத்தின் கீழ், கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2.5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதும் அதிகரித்துள்ளன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவர்களது குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

இதையும் படிங்க: #BREAKING ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிகாலையிலேயே காத்திருந்த அதிர்ச்சி.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்...!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு 76 கடிதங்கள் எழுதியுள்ளார். இருப்பினும், இந்திய அரசின் தூதரக முயற்சிகள் பலனளிக்கவில்லை என மீனவர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே சிறைபிடித்தனர். இவர்களுடன் அவர்கள் சென்ற ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்கள் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை கடற்படையின் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு, மற்றும் கடற்கொள்ளையர் அச்சுறுத்தல்களும் மீனவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மீனவ சமூகம் மத்திய, மாநில அரசுகளிடம் உரிய பாதுகாப்பு மற்றும் நிரந்தர தீர்வு கோரி வருகிறது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.


 

இதையும் படிங்க: ரெட் அலர்ட்!! டில்லியில் கொட்டித்தீர்க்கும் கனமழை!! மோசமான வானிலையால் தவிக்கும் விமான பயணிகள்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share