×
 

வியாழனும், வெள்ளியும் அருகருகே தோன்றும் அரிய நிகழ்வு!! ஜூன் 9ல் நடைபெறும் வானியல் அதிசயம்!

ஜூன் 9ம் தேதி வானில் மிகப்பிரகாசமாகத் தெரியும் இரு கோள்களான வெள்ளியும், வியாழனும் வழக்கத்திற்கு மாறாக மிக அருகில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெற இருக்கிறது

வானியல் ஆர்வலர்களுக்கு அரிய காட்சி ஒன்று ஜூன் 9-ம் தேதி வானில் நிகழவுள்ளது. சூரிய குடும்பத்தில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கோள்கள் வழக்கத்தை விட மிகவும் அருகருகே தோன்றும் அபூர்வ நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனைச் சுற்றி ஒவ்வொரு கோளும் தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றன. இந்தப் பயணத்தின் போது சில சமயங்களில் இரண்டு கோள்கள் வானில் மிக நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. அந்த வகையில் ஜூன் 9-ம் தேதி மாலை வெள்ளி மற்றும் வியாழன் கோள்கள் மிகவும் அருகில் தோன்ற உள்ளன.

இந்த நிகழ்வின் போது இரண்டு கோள்களுக்கும் இடையிலான தோற்ற இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அவை ஒன்றோடொன்று இணைந்திருப்பது போல அல்லது இரட்டை கோள்கள் போல காட்சியளிக்கும். வானில் பிரகாசமாக ஒளிரும் இந்த இரண்டு கோள்களும் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இன்று இரவு வானில் தோன்றும் நீல நிலா!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்!

சூரியன் மறைந்த பிறகு சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த காட்சியை சிறப்பாகக் காண முடியும். மேற்கு அல்லது வடமேற்கு திசையை நோக்கி வானத்தை பார்த்தால் இந்த அரிய நிகழ்வை ரசிக்கலாம். வெள்ளி மற்றும் வியாழன் இரண்டும் மிகவும் பிரகாசமான கோள்கள் என்பதால் தொலைநோக்கி அல்லது சிறப்பு கருவிகள் எதுவும் தேவையில்லை. வெறும் கண்களாலேயே தெளிவாகக் காண முடியும்.

வியாழன் பூமியிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதால் வெள்ளியை விட சற்று மங்கலாகத் தோன்றலாம் என்றும் வானியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இரண்டு கோள்களையும் எளிதில் அடையாளம் காண முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அரிய வானியல் நிகழ்வு மீண்டும் உடனடியாக நடைபெறாது என்றும், அடுத்த முறை இதுபோன்ற நெருக்கமான காட்சி 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிகழும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வானத்தை ரசிக்கும் அனைவரும் இந்த அரிய தருணத்தை தவறவிடாமல் பார்க்கலாம் என வானியல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்று இரவு வானில் தோன்றும் நீல நிலா!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share