×
 

ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவில் திருவிழா... ராசிபுரத்தில் விடிய விடிய கமகம விருந்து..!

ராசிபுரத்தில் உள்ள ஆண்கள் மட்டுமே வழிபடும் கருப்பண்ணர் கோவில் திருவிழா களைகட்டியது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி கிராமத்திற்கு அருகாமையில் கள்ளவழி கருப்பனார் கோயில் அமைந்திருக்கிறது. இது சாதாரண கோயில்கள் போலல்லாமல், மிகவும் தனித்துவமான ஒரு தெய்வ வழிபாட்டு இடம். இங்கு கருப்பனார் சிலை மரத்தடியில், வேல் கம்பங்கள், மணிகள் கொண்டு எளிமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

பக்தர்கள் இங்கு வரும் போது அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வலிமையான தெய்வமாகவே கருப்பண்ணனைப் போற்றுகிறார்கள். இந்தக் கோயிலின் மிகப்பெரிய சிறப்பு ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முப்பூசைத் திருவிழா. இது சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் பாரம்பரியம். விவசாயம் செழிக்க வேண்டும், மழை பொழிய வேண்டும், குடும்பத்தில் நலம் தழைக்க வேண்டும் என்று வேண்டுதல்களோடு மக்கள் இங்கு திரண்டு வருவார்கள்.

இந்தத் திருவிழாவில் முக்கிய அம்சம் ஆண்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று வழிபடுவது. பெண்கள் வெளியே இருந்து காத்திருப்பார்கள். இது பழங்காலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் வழக்கம், கருப்பனாரின் சக்தி ஆண்களின் மூலமாகவே முழுமையாக வெளிப்படும் என்ற நம்பிக்கையால் தொடர்கிறது.திருவிழா தொடங்கும் போது மாலை முதல் இரவு முழுவதும் பூஜைகள், அலங்காரங்கள் நடைபெறும்.

இதையும் படிங்க: வஞ்சிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களைச் சொல்லி, படையல் போடுவார்கள். ஆனால் மிகவும் கவர்ச்சிகரமானது விடிய விடிய நடக்கும் சமபந்தி விருந்து தான். ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுடச்சுட கறி விருந்து பரிமாறப்படும். ஆடு, பன்றி உள்ளிட்டவை பல்வேறு எண்ணிக்கையில் வெட்டப்பட்டு, பெரிய அளவில் சமைக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்படும். இந்த ஆண்டும் ஆண்கள் மட்டும் வழிபடும் கள்ளவழி கருப்பனார் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விடிய, விடிய நடந்த சமபந்தி விருந்தில் ஆண்களும், பெண்களும் கலந்துக் கொண்டனர். 39 ஆடுகள், 30 பன்றிகள் மற்றும் 25 கோழிகள் பலியிடப்பட்டு விருந்து வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: SAFETY FIRST..! பரவி வரும் பறவை காய்ச்சல்..! மக்கள் உஷாராக இருக்க நயினார் அறிவுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share