ரேஷன் கார்டுக்கு செக்! 6 மாதமாக பொருள் வாங்காதவர்களின் கார்டு நாளை முதல் முடக்கம்!
6 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காத நியாயவிலை கார்டுகள் முடக்கப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பொது விநியோக முறைமையை (பிடிஎஸ்) மேலும் திறம்படவும், வெளிப்படையாகவும் செயல்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் கார்டு மூலம் எந்தப் பொருட்களையும் வாங்காத பயனாளிகளின் சலுகைகள் நாளை அக்டோபர் ஒன்று முதல் தற்காலிகமாக முடக்கப்படும். இதனால் சுமார் 1.58 கோடி பயனாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் சுமார் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் சிலர் நீண்ட காலமாக பொருட்களை வாங்காமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து பதிவேட்டில் இடம்பெறுவது, இடம் பெயர்ந்த பிறகும் பழைய முகவரியில் பதிவு தொடர்வது, நகல் அல்லது போலி பயனாளிகள் போன்ற குளறுபடிகளை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு இந்தக் கார்டுகளை “சைலன்ட் ரேஷன் கார்டுகள்” என அழைக்கிறது.
அதாவது கடந்த ஆறு மாதங்களில் எந்த உணவு தானியங்களும் வாங்கப்படாத கார்டுகள் இவை.முக்கியமாக, இந்த முடக்கம் நிரந்தரமானது அல்ல. ரேஷன் கார்டுகள் முதலில் தற்காலிகமாக முடக்கப்படும். பயனாளிகளின் பெயர்கள் உடனடியாக தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட மாட்டாது. முடக்கப்பட்டவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தக் காலத்தில் அவர்கள் இ-கே.ஒய்.சி (மின்னணு அறிவுறுத்தல்) நடைமுறையை முடித்துவிட்டால், கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: மருந்தகங்களில் CCTV பொருத்த மத்திய அரசு பரிந்துரை!! காரணம் இதுதானாம்..!!
இ-கே.ஒய்.சி முடித்து, தேவையான களச் சரிபார்ப்பும் நடந்தால், உண்மையான பயனாளியாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.இந்த முறை SMART-PDS போர்டல் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 21ஆம் தேதி வரை ஆறு மாதங்களாக பொருட்கள் வாங்காத கார்டுகள் அடையாளம் காணப்பட்டு, அடுத்த மாதம் முதல் தேதி முதல் தானாக முடக்கப்படும். பயனாளிகளுக்கு குடும்பத் தலைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு செய்தி அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கிராம மக்களுக்கு மத்திய அரசின் புதிய சலுகை..!! சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்..!!