பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற இப்படியுமா? ஸ்டாலினின் ப்ளான் இதுதான்! ஆர்.பி உதயகுமார் விளாசல்..!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி செல்லவில்லை. பாலியல் குற்றவாளிகள் தப்பிப்பதற்காக டெல்லி செல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இதன்படி நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2015-ல் தொடங்கி இதுவரை 9 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதையும் படிங்க: அமைச்சர்கள் கஜானாவில் ஆயிரம் கோடிகள்? வீடியோ வெளியிட்டு தோலுரிக்கும் அண்ணாமலை..!
இந்த நிலையில், நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் முக்கிய பிரமுகர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி செல்லவில்லை. பாலியல் குற்றவாளிகள் தப்பிப்பதற்காக டெல்லி செல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்து வருவதாகவும், அதை திமுக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது பேசுகையில், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பாலியல் குற்ற சம்பவம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு வழக்கு 30 சதவீதம் கூடுதலாக உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டு 4 ஆயிரத்து 211 வழக்குகள், 2021ல் 4 ஆயிரத்து 470 வழக்குகள், 2024ல் 6 ஆயிரத்து 920 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதுவரை 18 ஆயிரத்து 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புள்ளி விவரத்துடன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு இப்போது, யார் அந்த சார், யார் அந்த தம்பி, யார் அந்த தியாகி என அந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக டெல்லி செல்கிறாரோ? என்ற சந்தேகம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 100 நாள் சம்பளத்தை கூட 38 எம்பிக்களை வைத்துக்கொண்டு அவரால் வாங்கித் தர முடியாததை அதிமுக வாங்கி கொடுத்துள்ளது.
2011ல் மின்வெட்டால் திமுக ஆட்சியை இழந்தது, அதைப்போல் 2026ல் அளவுகடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் வீட்டிற்கு செல்லும். 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை, நாட்டு மக்களுக்காக டெல்லி செல்லவில்லை, வீட்டிற்க்காக செல்கிறார் என ஆர்.பி.உதயகுமார் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர், மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்! பிரதமர் மோடியை தனியே சந்திக்க டைம் கேட்கும் மு.க.ஸ்டாலின்..!