உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!
உயர்கல்வியை வணிகமயமாக்கி இடஒதுக்கீட்டைப் பறிக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டம் 2026ஐ உடனே திரும்பப் பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் அடித்தட்டு மற்றும் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைப் பறித்து, கல்வித் துறையை அப்பட்டமாகத் தனியார் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் நோக்கில், நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டம் – 2026’-ஐ ஆளும் தவெக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவு நாளில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்தச் சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தம் குறித்து சீமான் வெளியிட்டுள்ள மிக விரிவான கண்டன அறிக்கையில், "கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, மாநிலத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலப்பரப்பும், ரூ.50 கோடி நிரந்தர வைப்புத்தொகையும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற கடுமையான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்த விதிகளை அடியோடு தளர்த்தி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெறும் 12 ஏக்கர் நிலமும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கரும், ஊரகப் பகுதிகளில் 25 ஏக்கர் நிலமும் இருந்தாலே போதுமானது என நில அளவை அதிரடியாகக் குறைத்துள்ளனர். அத்துடன் ரூ.50 கோடியாக இருந்த நிரந்தர வைப்புத்தொகையை ரூ.25 கோடியாகப் பாதியாகக் குறைத்திருப்பது, தனியார் கல்லூரிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொள்ளை லாபம் ஈட்ட அரசு துணைபோவதையே காட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!
மேலும் கடந்த கால வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், "தனியார் கல்லூரிகள் தங்களைப் பல்கலைக்கழகங்களாக மாற்றி வணிகம் செய்வதற்காக, கடந்த 2008 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் முந்தைய திமுக அரசால் கொண்டுவர முயலப்பட்ட இதே சட்ட வரைவானது மக்கள் மற்றும் கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. ஆனால், கைவிடப்பட்ட அந்த அபாயகரமான சட்டத்தை எவ்விதத் தயக்கமுமின்றி, ‘தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட வரைவு – 2026’ என்ற பெயரில் தற்போதைய தவெக அரசு அசுர வேகத்தில் நிறைவேற்றியுள்ளது.
உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் முடிந்து இரண்டு வாரங்கள் கழித்து, கூட்டத்தொடரின் கடைசி நாளில் இதனை அவசரமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் என்ன? யாருடைய உத்தரவின் பேரில், எந்தக் கல்வி முதலாளிகளின் பணப் பெட்டிகளை நிரப்ப இச்சட்டம் கொண்டுவரப்பட்டது?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இச்சட்டத்தால் ஏற்படும் பேரழிவுகள் குறித்து எச்சரித்த சீமான், "இந்த விதிமுறைத் தளர்வுகளால் தமிழ்நாட்டில் இயங்கி வரும் சுமார் 163 அரசு உதவிபெறும் கல்லூரிகள் தங்களைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக்கொள்ளும் பேராபத்து உருவாகியுள்ளது. இதுவரை அரசின் கீழ் இருக்கும் உதவிபெறும் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள சமூகநீதிக்கான இடஒதுக்கீட்டு முறை அடியோடு ஒழிக்கப்படும். ஏழை மாணவர்களுக்கான கட்டணச் சலுகைகளும் பறிக்கப்பட்டு, நன்கொடை என்ற பெயரில் கொள்ளைக் கட்டணம் வசூலித்து விருப்பம்போல மாணவர் சேர்க்கை நடத்தப்படும் சூழல் உருவாகும்.
இதனால் கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்விக் கனவு கானல் நீராகிவிடும். மேலும், 100 விழுக்காடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களில், அரசு ஒதுக்கீட்டிற்கு வெறும் 50 முதல் 65 விழுக்காடு மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்படும். அங்குப் பணியாற்றும் 5,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பும் ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாகும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இறுதியாக ஆளும் தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய சீமான், ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 100 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கல்விக் கட்டமைப்பை வேரோடு சிதைத்து சின்னாபின்னமாக்கியதுதான் தவெக அரசின் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகும்.
சமூகநீதி அரசு என்று வாய்வார்த்தை பேசிக்கொண்டு, இடஒதுக்கீட்டை ஒழித்து ஏழை மாணவர்களை வஞ்சிப்பதுதான் முதலமைச்சர் சொல்லும் 'தூய சக்தியா'? அரசின் கட்டுப்பாட்டில் இருந்த உயர்கல்வியைத் தனியார் முதலாளிகளுக்கு வாரி வழங்கி லாபமீட்ட வைப்பதுதான் ஊழல் எதிர்ப்பு முறையா? வெட்கக்கேடு! வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற சமூக அநீதியை உருவாக்கும் இந்தத் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டம் – 2026-ஐ தமிழ்நாடு அரசு எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக அரசுக்கு சவால்.. செங்கோட்டையன் பேட்டிக்கு நடுவே பவர் கட்.. அப்செட்டான நிர்வாகிகள்!!