×
 

தேர்தல் விதிமீறலா? 100 நிமிடத்தில் தீர்வு! சி-விஜில் செயலி குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

தேர்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் 'சி-விஜில்' எனும் செயலி மூலமாக புகார் அளிக்கலாம். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 'சி-விஜில்' (c-VIGIL) செயலியைப் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல், பரிசுப் பொருட்கள் விநியோகம், மது விநியோகம், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஒலிபெருக்கி பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்களைப் பொதுமக்கள் இந்தச் செயலியில் நேரடியாகப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துப் பதிவேற்றலாம்.

சி-விஜில் மூலம் பெறப்படும் புகார்கள் மீது அதிகபட்சமாக 100 நிமிடங்களுக்குள் பறக்கும் படையினர் மூலம் விசாரணை நடத்தப்பட்டுத் தீர்வு காணப்படும். நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரம் புகார் அளித்தவரின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பப்படும்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!! தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள்..!! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!!

தகவல் கொடுப்பவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை எனில், அநாமதேயமாக  புகார் அளிக்கும் வசதியும் இதில் உள்ளது. புகார் அளிப்பவர்களின் விபரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது; அவை பரம ரகசியமாக வைக்கப்படும் என அர்ச்சனா பட்நாயக் உறுதியளித்துள்ளார்.

இந்தச் செயலியில் ஏற்கனவே எடுத்து வைத்த பழைய புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பதிவேற்ற முடியாது. சம்பவ இடத்திலேயே நேரலையாக எடுக்கப்படும் ஆதாரங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் போலிப் புகார்கள் தவிர்க்கப்படுகின்றன.

ஸ்மார்ட்போன் பயனாளர்கள் 'கூகுள் பிளே ஸ்டோர்' அல்லது ஆப்பிள் 'ஆப் ஸ்டோர்' மூலம் c-VIGIL செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதைப் பயன்படுத்துவது எளிமையானது மற்றும் நம்பகத்தன்மையானது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...! 'சுவிதா' ஆப் சிக்கலுக்குத் தீர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share