சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க.. ரூட் மாறுது..!! இந்த 4 நாள் இப்படி தான் இருக்குமாம்..!!
சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால் இன்று மற்றும் ஜனவரி 21, 23, 26 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனால், இன்று (ஜன. 19), ஜன. 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகர காவல்துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான பகுதியில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின கொண்டாட்டம் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற உள்ள நிலையில், இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வரும் நாட்களில் ஒத்திகை தொடரும் என்பதால், போக்குவரத்து ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு:
இதையும் படிங்க: குடியரசு தினத்துக்கு ஐரோப்பிய சிறப்பு விருந்தினர்கள்.. உர்சுலா மற்றும் அன்டோனியோ கோஸ்டா வருகை!
அடையாறு பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள்: கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்கடேச அக்ரகாரம் தெரு, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யு அமிர்தான்சன் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாதெமி, டி.டி.கே. சாலை, கௌடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக செல்லலாம்.
அடையாறு பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள் (மாநகர பேருந்துகள் உள்பட): காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு, ராயபேட்டை 1 பாயிண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாதெமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக சென்றடையலாம்.
மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்: ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயபேட்டை 1 பாயிண்ட்டில் இடது அல்லது வலதுபுறம் திரும்பி இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறம் திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாதெமி, டி.டி.கே. சாலை, கொளடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே செல்லலாம். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக வரும் வாகனங்கள்: ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்படும்.
டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து வரும் வாகனங்கள்: பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் ஹவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும். காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள்: பாரதி சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள்: பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
மேலும், அண்ணா சதுக்கம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகே மாற்றப்பட்டுள்ளது. பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதைக்கு பதிலாக வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, ஜி.பி. சாலை, ராயபேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆர்.எச். சாலை, அஜந்தா சந்திப்பில் இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடது அல்லது வலதுபுறம் திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக இலக்கை சென்றடையலாம்.
அண்ணா சாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாயிண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. காவல்துறை, வாகன ஓட்டிகள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், நிகழ்ச்சியை சுமுகமாக நடத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2026 குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி..!! கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!