×
 

வரதட்சணை கொடுமையால் பறிபோன உயிர்.. ரிதன்யாவின் தந்தை பரபரப்பு புகார்..!!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ரிதன்யா, திருமணமான 78 நாட்களில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிதன்யா, எம்.எஸ்.சி பட்டதாரியான இவருக்கு, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி கவின்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 300 பவுன் நகைகள் மற்றும் 70 லட்சம் மதிப்பிலான கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டன. 

இருப்பினும், மேலும் 200 பவுன் நகைகள் கேட்டு கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்ஆப் ஆடியோ மூலம் தெரிவித்திருந்தார். ஜூன் 28 அன்று, கோயிலுக்கு சென்று திரும்பிய ரிதன்யா, சாலையோரத்தில் காரை நிறுத்தி, பூச்சி மருந்து உட்கொண்டு உயிரிழந்தார். 

இதையும் படிங்க: குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை.. காட்டுமிராண்டி காவலரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

இவரது ஆடியோ வாக்குமூலத்தின் அடிப்படையில், கணவர், மாமனார், மாமியார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர். ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கோரியுள்ளார். மாமியார் சித்ராதேவி உடல்நலக் காரணங்களால் முதலில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் ஜாமின் மனு மீதான விசாரணையில் உள்ளது. 

இந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். “வழக்கு விசாரணையில் அரசியல் அழுத்தங்கள் இருப்பதாகவும், சந்தேக மரணமாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை உள்ளடக்கி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மகளின் மரணத்தை சந்தேக மரணம் என்று மட்டுமே பதிவு செய்துள்ளனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். ரிதன்யாவுக்கு நடந்ததைப் போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது, சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர், என் பெண்ணைப் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.

 

இதையும் படிங்க: குடும்பமே சேர்ந்து வரதட்சணை கொடுமை.. காட்டுமிராண்டி காவலரை கொத்தாக தூக்கிய போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share