×
 

ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரி வழக்கு.. தலைமை கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு..!!

சென்னையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்தக்கோரி வழக்கில் தலைமை கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஆக்ரோஷமான நாய்களை, குறிப்பாக ராட்வீலர் இனத்தை முறைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆக்ரோஷமான நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமை கால்நடை அதிகாரி ஆகஸ்ட் 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

கடந்த 2024ம் ஆண்டு மே மாதம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் இரண்டு ராட்வீலர் நாய்கள், கட்டுப்படுத்தப்படாமல், ஐந்து வயது சிறுமி சுரக்ஷாவை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிறுமிக்கு தலையில் 11 அங்குல காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாய்களின் உரிமையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 289 மற்றும் 336-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: மீண்டும் கேட்ட வெடி சத்தம்.. பறிபோன 3 உயிர்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

இதையடுத்து, சென்னை மாநகராட்சி பொது இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு கடிவாளமும், முகக்கவசமும் கட்டாயமாக்கியது மற்றும் உரிமம் பெற வேண்டும் என்று அறிவித்தது. மத்திய அரசு, மார்ச் 2024-ல் ராட்வீலர் உள்ளிட்ட 23 ஆக்ரோஷமான நாய் இனங்களின் விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்திருந்தாலும், இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு, செல்லப்பிராணி உரிமையாளர்களின் பொறுப்பு மற்றும் பொது பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்துவது மற்றும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிப்பது குறித்து பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு.. அட.. இவங்களுக்கா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share