×
 

சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

சென்னையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னை அசோக் நகரில் ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை தேர்தல் கண்காணிப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 23-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் அல்லது பொருட்களை கொண்டு செல்பவர்களை சோதனை செய்து, சந்தேகத்துக்கு இடமான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று அசோக் நகர் 11-வது நிழற்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 21 வாகனங்கள் அடங்கிய அணிவகுப்பு ஒன்று வந்தது. இந்த வாகனங்களில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. 20 வாகனங்களில் உள்ள பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தன. ஆனால், ஒரு வாகனத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு எந்த ஆவணமும் இல்லை.

இதையும் படிங்க: தந்திரமா? தியாகமா? கமல் முடிவுக்கு காரணம் என்ன? திமுக கொடுத்த 2 தொகுதிகளை மநீம தவிர்த்தது ஏன்?

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்தனர். அதில் ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்காக கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தேர்தலில் பணப் பட்டுவாடா மற்றும் பொருள் பரிமாற்றத்தை தடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: நெருங்கும் சட்டசபை தேர்தல்! பதுக்கப்படும் பணம்!! ஏடிஎம் -களில் ரூ.500 நோட்டு தட்டுப்பாடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share