உங்களுக்கு மனசாட்சி இல்லையா? நீதி எங்கே போனது? ஈபிஎஸ்-ஐ கேள்வி கணைகளால் துளைத்த ஆர்.எஸ்.பாரதி!!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசிய போது நீதி எங்கே போனது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்புவனம் கொடூரம் பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விரைந்து கைதும் செய்யப்பட்டனர்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!
அதுமட்டுமின்றி, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுப்பதும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை; இன்று அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்.
முதலமைச்சர் உங்கள் இருண்டகால ஆட்சியில் நடைபெற்ற, சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் - பென்னீக்ஸ் இருவருமே உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்? அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா? உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்; இனியாவது நிறுத்திக் கொள்ளலாம்; நீதியை நிலைநாட்ட முதலமைச்சர் இருக்கிறார்! என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #SORRY..ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி