ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!
களத்திற்கு வந்து மக்களைச் சந்திக்காமல் ஆட்சி செய்வது வேலைக்காகாது எனவும், ரீல்ஸ்களை நம்பி வாக்களித்துவிட்டுப் புலம்புவதில் பயன் இல்லை எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பிறகு களத்திற்கு வந்து மக்களை நேரில் சந்திக்காமல் எங்கேயோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்துகொண்டு வாய்ஜாலம் பேசுவது ஒருபோதும் வேலைக்காகாது என்றும், சமூக வலைதள ரீல்ஸ்களையும் போட்டோஷூட்டுகளையும் நம்பி ஏமாந்து ஓட்டுப் போட்டுவிட்டு இப்போது 'குத்துதே குடையுதே' என்று புலம்புவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாகத் தொடர் கள ஆய்வு மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், சின்னப்பரூர் மற்றும் மு. அகரம் கிராமங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள், கொள்முதல் தாமதமாவதால் தாங்கள் கொண்டுவந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்துச் சேதமடைந்து கிடப்பதைக் கண்ணீருடன் அவரிடம் சுட்டிக்காட்டிக் கதறினர். இதனைக் கண்டு வேதனையடைந்த பிரேமலதா விஜயகாந்த், நெல்மணிகள் மேலும் வீணாகாமல் தடுக்க கூடுதல் கொள்முதல் இயந்திரங்களை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதலை விரைந்து முடிக்க வேண்டும் என்று அங்குள்ள துறை அதிகாரிகளை நேரில் அழைத்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நான் தொகுதிக்குள் எங்குச் சென்றாலும் மக்கள் பிரச்சனைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், போதிய அரசுப் பேருந்து வசதி செய்து தர வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும், தார்ச்சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என மக்கள் அடுக்கடுக்காக மனுக்களைத் தருகிறார்கள்; இதையெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்கம்தான் விரைந்து சரிசெய்ய வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த ஆளுங்கட்சி விரைவாகக் களத்திற்கு வர வேண்டும்; அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டு அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது கொஞ்சமும் வேலைக்காகாது. வாக்களித்த மக்களை நேரடியாகக் களத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!
தொடர்ந்து இடைத்தேர்தல் அரசியல் மற்றும் ஆளும் அரசின் போக்குகளைக் கடுமையாகச் சாடிய அவர், நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமைதூக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு வழங்கப்படும் வெறும் 10 ரூபாய் கூலியை உயர்த்தி வழங்கினால்தான் விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வில் அவர்களால் குடும்பம் நடத்த முடியும். இத்தகைய அத்தியாவசிய மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும்போது, இந்த அரசின் சிந்தனை முழுவதும் எதையோ சாதிப்பது போல வேறு எங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறது. எந்தத் தேவையும் இல்லாமல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தலைத் திணித்து, அதே நபர்களை வேட்பாளர்களாக நிறுத்தி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். இத்தகைய ஏமாற்றுக்காரர்கள், பொய் பேசுபவர்கள் மற்றும் நாடக நடிகர்களின் முகமூடிகளை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று வெளுத்து வாங்கினார்.
மேலும் வாக்காளர்களுக்கு வெளிப்படையான எச்சரிக்கை விடுத்த அவர், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவதையும், விதவிதமாகப் போட்டோஷூட் நடத்துவதையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்களை நம்பி, 'வீட்டில் குழந்தைகள் சொன்னார்கள், பேரன் பேத்திகள் சொன்னார்கள்' என்று கண்மூடித்தனமாக மாற்றி வாக்களித்துவிட்டார்கள். இப்போது வேலைவாய்ப்பின்மை, போதிய வருமானம் இன்மை என அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் மக்கள் கடுமையான கஷ்டங்களைச் சந்திக்கின்றனர். உண்மையாக மக்களுக்காக உழைப்பவர்கள் யார், மக்களை நேசிப்பவர்கள் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அவர்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்; அப்போதுதான் தமிழகத்தில் உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும், தமிழ்நாடு வல்லரசாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெருங்கும் இடைத்தேர்தல்... ஆதரவு கேட்ட ஸ்டாலின்..! சட்டென சம்மதித்த பிரேமலதா..!!