எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!
இந்தியா தோல்வியடையும் என எதிர்பார்த்தவர்கள் இன்று ஏமாற்றத்தில் உள்ளனர் என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை சாடினார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை இந்தியா திறம்பட எதிர்கொண்டு, அதன் பொருளாதாரச் சுமை பொதுமக்கள் மீது பெருமளவில் விழாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் பாலோத்ரா மாவட்டம் பச்பத்ராவில் நாட்டின் முதல் கிரீன்ஃபீல்ட் ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை திறந்து வைத்த அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், மேற்காசியாவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவிய அசாதாரண சூழலை இந்தியா திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் சமாளித்ததாகக் குறிப்பிட்டார். நெருக்கடிக்கு முன்பு சுமார் 25 முதல் 26 நாடுகளில் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்த இந்தியா, பின்னர் தனது இறக்குமதி ஆதாரங்களை விரிவுபடுத்தி 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இது இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை மற்றும் ராஜதந்திர அணுகுமுறையின் வெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் விளைவாக, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதிச் சுமை ஏற்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அந்தச் சுமையை மத்திய அரசே ஏற்றுக்கொண்டதால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றார். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்ததன் மூலம் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் விளக்கினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்: வி.பி. ஜிராம்ஜி திட்டத்தில் 100% நிதி கோரி வலியுறுத்தல்!
இந்தியாவுக்கு எதிராக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டதுடன், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்ததாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால் அவற்றை இந்தியா உறுதியுடன் எதிர்கொண்டு முன்னேற்றப் பாதையில் பயணித்து வருவதாகவும், இந்தியா தோல்வியடையும் என எதிர்பார்த்தவர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு திறன் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது நாட்டின் எரிசக்தித் துறையின் முக்கிய சாதனையாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார். ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணிக்கு இடையிலான மோதலால் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் உர விநியோகச் சவால்களையும் மத்திய அரசின் நீண்டகால திட்டமிடல் மற்றும் மாற்று விநியோக ஏற்பாடுகள் மூலம் வெற்றிகரமாக சமாளிக்க முடிந்ததாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!