4,000 பேர் நிற்க வேண்டிய இடத்தில் 20,000 பேர்! திக்குமுக்காடும் சபரிமலை! கேரள ஐகோர்ட் விளாசல்!
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேவசம் போர்டு ஏன் பின்பற்றவில்லை என கேரளா ஹைகோர்ட் கேள்வி எழுப்பிஉள்ளது.
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் 17 அன்று தொடங்கியது. இதையொட்டி நவம்பர் 16 மாலை நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் தற்போது சூழ்ந்துள்ளது.
இதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது. பக்தர்களை சிறிய குழுக்களாக பிரித்து அனுப்பி, நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) வீரர்கள் சபரிமலை சென்று நெரிசலை சமாளிக்க உதவுகின்றனர்.
மண்டல பூஜை தொடக்கம்: சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று திறக்கப்படும் மண்டல-மகரவிளக்கு கால பூஜைக்கு இந்தாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்துள்ளனர். நடை திறக்கப்பட்ட அடுத்த நாளே பம்பா முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் தினசரி 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என்று TDB அறிவித்திருந்தது. ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே நவம்பர் மாத முழுவதும் இடங்கள் நிறைந்தன. தற்போது டிசம்பர் 10 வரையிலும் முன்பதிவுகள் நிறைவு பெற்றுள்ளன. நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்தில் 2 லட்சம் பக்தர்கள், குழந்தைகள் உட்பட, தரிசனம் செய்துள்ளனர் என்று TDB தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பன் கருவறை தங்க கதவிலும் திருட்டு!! பெங்களூரு தொழில் அதிபர் மீண்டும் கைது!
நெரிசல் பிரச்சினைகள்: ஆனால், இந்த அதிகரித்த பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஏற்பாடுகள் இல்லை. எருமேலியிலிருந்து நடைபயணம் செய்து வரும் பக்தர்கள் சன்னிதானத்தை அடைய முடியாமல் பாதி வழியில் நிறுத்தப்படுகின்றனர். நிலக்கல்லிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பம்பையில் பல மணி நேரம் காத்திருந்த பிறகே மலை ஏற அனுமதி கிடைக்கிறது. 18 படிகள் அருகே கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. 8 மணி நேரம் வரிசையில் நிற்கும் இடங்களில் தண்ணீர், உணவு, கழிவறை வசதிகள் இல்லை.
பக்தர்கள், "போலீஸார் போதுமான அளவில் இல்லை. வாகனங்கள், பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. அரசும் TDBயும் காணிக்கை மட்டும் பார்க்கிறார்கள்; நம்மை புறக்கணிக்கிறார்கள்" என்று குமுறுகின்றனர். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) தலைமையிலான அரசும், TDBயும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோர்ட்டின் கடுமை விமர்சம் மற்றும் உத்தரவுகள்: இந்த நெரிசல் தொடர்பான பொது நல வழக்குகளை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், "மண்டல பூஜை தொடங்கியதிலிருந்து கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை ஏன் கட்டுப்படுத்தவில்லை? 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் செய்திருந்தால் இது தவிர்க்கப்பட்டிருக்கும்" என்று TDB அதிகாரிகளை கண்டித்தது.
போதிய ஒருங்கிணைப்பு இல்லை; முந்தைய உத்தரவுகளை ஏன் பின்பற்றவில்லை? 4,000 பேருக்கு மட்டும் போதும் என்ற இடத்தில் 20,000 பேரை ஏன் அனுமதித்தீர்கள்? ஒரே இடத்தில் பக்தர்களை தேக்கி வைப்பது ஆபத்தானது என்று நீதிபதிகள் ராஜா விஜயராகவன், கே.வி. ஜெயகுமார் கூறினர்.
பக்தர்களை சிறிய குழுக்களாக பிரித்து அனுப்ப வேண்டும்; ஒரே நேரத்தில் அனைவரையும் தள்ளி அனுப்புவது தவறு என்று உத்தரவிட்டது. கோயில், பம்பா, நிலக்கல் உள்ளிட்ட இடங்களின் தனித்தனி திறன் அளவுகளை தெரிவிக்கவும், நெரிசல் நிர்வாக நிபுணர் குழுவை உருவாக்கவும் கோர்ட் கூறியது. ஸ்பாட் புக்கிங்கை நவம்பர் 24 வரை தினசரி 5,000 ஆகக் குறைக்கவும், அதன்படி மொத்தம் 75,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கவும் உத்தரவிட்டது.
சபரிமலை இணையதளத்தில் பல்மொழி புகார் பதிவு போர்ட்டலை உருவாக்கவும் கூறியது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரிக்கப்படும்.
TDBவின் பதில்: புதிதாக நியமிக்கப்பட்ட TDB தலைவர் கே. ஜெயகுமார், "கோர்ட்டின் கவலைகளை ஏற்றுக்கொள்கிறோம். 6 மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது சரி" என்று ஒப்புக்கொண்டார். ஆனால், ஸ்பாட் புக்கிங் குறைப்பால் பம்பா, நிலக்கல், எருமேலி, சேங்கனூர், வந்திபெரியார் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர். ஏற்கனவே வந்திருந்தவர்கள் குழப்பத்தில் உள்ளனர். NDRF குழுவை அரக்கோணத்திலிருந்து அழைத்துவிட்டு, நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இனி பார்சல்களை மட்டும் அனுப்ப தனி ரயில்..!! டிச.12ம் தேதி முதல் இயக்கம்..!!