#BREAKING சென்னையில் மீண்டும் உண்ணாவிரதம்... தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது...!
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே தூய்மை பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 1ம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மை மண்டலம் 5 மற்றும் 6-யைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தனியார் மையமாக்குவதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 13 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து 13ஆம் தேதி நள்ளிரவு தூய்மை பணியாளர்கள் அனைவரும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக தூய்மை பணியாளர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் ஆலோசித்து வந்த நிலையில், நேற்றைய தினம் கொறுக்குப்பேட்டையில் தூய்மை மண்டலம் 5 மற்றும் 6-யைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 13 பேர் அங்குள்ள அவர்களது இல்லத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் சுமார் 1 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை ரிப்பன் மாளிகை பின்புறம் இருக்கக்கூடிய பகுதியில் 13 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் வழங்காததை கண்டித்து இரண்டாவது நாளாக தூய்மை பணியாளர்கள் இன்றும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே உண்ணாவரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த இடத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து ரிப்பன் மாளிகை வளாகம் முழுவதும் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலைக்கு வரலனா வேறு ஆட்களை பணியமர்த்துவோம்... ஐகோர்ட்டில் தனியார் நிறுவனம் திட்டவட்டம்!
இதையும் படிங்க: திருமாவின் பேச்சு சரியல்ல… சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு..!