முதல்வருக்கு நன்றி.. தூய்மை பணியாளர்கள் மாபெரும் பேரணி..! உணவு பரிமாறிய மேயர் பிரியா..!
சிறப்பு திட்டங்கள் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூய்மை பணியாளர்கள் பேரணி நடத்தினர்
சென்னையில் 13 நாட்களாக பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். அதில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தூய்மை பணியாளர்கள் பணியின்போது இறந்தால் கூடுதலாக 5 லட்ச ரூபாய் என 10 லட்சம் இழப்பீடு தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தூய்மை தொழிலாளர்கள் கடன் உதவிக்காக 10 கோடி ரூபாய் டிக்கெட் செய்யப்படும் என்றும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: மனசு நிறைவா இருக்கு... வளர்ச்சினா என்ன தெரியுமா? நெகிழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
மேலும் நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு 30,000 குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்றும் கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். தூய்மை பணியாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த ஆறு சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும் என்று கூறினார். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் முதல் முறையாக சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட உள்ளதாகவும், தூய்மை பணியாளர்கள் குழந்தைகளின் உயர்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி, விடுதி மற்றும் புத்தக கட்டணம் வழங்கப்படும் எனவும் கூறினார். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் என்றும் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும்., வழக்குகளின் முடிவில் பணி நிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிறப்பு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்தினர். 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். பேரணியின் முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறினர்.
இதையும் படிங்க: #BREAKING: நாட்டின் 79 வது சுதந்திர தினம்...கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!