#BREAKING: புதிய கட்சி தொடங்கினார் சசிகலா! அதிமுக துரோகிகளை வீழ்த்துவேன் என சபதம்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா தனது புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாளான இன்று, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் சசிகலா. பசும்பொன்னில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழாவில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுக-வின் தற்போதைய தலைமையைக் கடுமையாகச் சாடியதோடு, ஒரு புதிய திராவிடக் கட்சியைத் தொடங்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையும் படிங்க: நாளை ஒரு நல்ல தகவல் வரும்! ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உருக்கம்!
"எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்கப் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் ஒரு புதிய திராவிடக் கட்சியை இன்று தொடங்குகிறேன். கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்த விபரங்கள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும்" என முழங்கினார். இதன் மூலம் அதிமுக-வின் ஒரு தரப்பைத் தனது பக்கம் இழுக்க அவர் தயாராகிவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து நிலவும் சர்ச்சைகளுக்குப் பதிலளித்த அவர், "மருத்துவமனையில் 72 நாட்கள் உடன் இருந்து அம்மாவைப் பார்த்தவள் நான். அவர் நல்லபடியாக வீடு திரும்ப இருந்த நிலையில்தான் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், நான்தான் அவரைக் கொன்றதாக வெளியே இல்லாத கதைகளைக் கட்டிப் பழி சுமத்தினார்கள்" என மேடையிலேயே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிறையில் இருந்தபோது தனக்குப் பரோல் வழங்க விடாமல் தடுத்தது மற்றும் சிறையிலிருந்து திரும்பிய போது ஓசூரில் வைத்துத் தன்னைத் திட்டமிட்டுச் சிலர் கைது செய்ய முயன்றது என அதிமுக-வின் தற்போதைய தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சசிகலா முன்வைத்தார். துரோகிகள் ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமையக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"உண்மையான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்; தர்மமே வெல்லும்" என்று கூறி தனது உரையை முடித்த சசிகலா, தமிழக அரசியலில் ஒரு புதிய 'தர்மயுத்தத்தைத்' தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அனல் பறக்கும் அரசியல் களம்..!! சசிகலா 'அம்மா அதிமுக' கட்சி அறிவிப்பு..!! 2026 தேர்தலில் எடப்பாடிக்கு பெரும் சவால்..!!