×
 

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 9 காவலர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு!

சாத்தான்குளம் தந்தை மகன்  வழக்கில் தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில், சிபிஐ (CBI) விசாரணையின் அடிப்படையில் காவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 11 மணி முதல் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள பரபரப்பான சூழலில், ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் மதுரை நீதிமன்றத்தின் இந்தப் பரபரப்புத் தீர்ப்பின் மீது திரும்பியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கல் செய்யப்பட்டதில் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த மார்ச் 23-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் 9 காவலர்களும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த அறிக்கையை இன்று (மார்ச் 30) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அந்த அறிக்கையைப் பரிசீலித்த பிறகு, இன்று தண்டனை விவரங்கள் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளன.

தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதையொட்டி மதுரை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சிபிஐ தரப்பில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஏற்கனவே வாதிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத்தைத் தொடங்குவது மற்றும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே களம் இறங்குவது போன்ற முக்கிய நிகழ்வுகள் இருந்தாலும், மனித உரிமை மீறலுக்கு எதிரான இந்த வழக்கின் தீர்ப்பு சமூக ரீதியாக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: அஇபுதமமுக முதல் வேட்பாளர் பட்டியல்: 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் வி.கே.சசிகலா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share