×
 

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிப்பு.. மே 20 கடைசி நாள்.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை மே 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பும் நோக்கில், மாவட்ட வாரியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை மே 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (CEO) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2025 நிலவரப்படி காலியாக உள்ள பணியிடங்களின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும். அனைத்துப் பாடப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நிரப்பத் தகுந்த காலிப்பணியிட விவரங்கள் இதில் அடங்கும்.

இதையும் படிங்க: “நேரு மீதான புகார்கள் என்னாச்சு?”: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை மே 20-ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். காலிப்பணியிடங்களைக் கணக்கிடும் போது மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குச் சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:

01.08.2025 நிலவரப்படி ஆசிரியர் இல்லாமல் ‘உபரி’ (Surplus) எனக் கண்டறியப்பட்டு, பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கருதக்கூடாது.

பள்ளிகளின் ‘கூடுதல் தேவை’ (Additional Requirement) பட்டியலையும் காலிப்பணியிடப் பட்டியலில் சேர்க்கக்கூடாது. காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது, அந்தப் பணியிடம் ஐஎப்எச்ஆர்எம் தளத்தில் முறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ள சூழலில், பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர் தேர்வாணையம் (TRB) மூலம் புதிய பணி நியமனங்களை மேற்கொள்வதற்கான முதற்கட்டப் பணியாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுத் தவெக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share