×
 

 “பள்ளிகள் இன்று திறப்பு;  போராட்டக் களத்தில் ஆசிரியர்கள்!” மௌனம் கலைத்து ஹாட்ரிக் அடிப்பாரா முதல்வர் ஸ்டாலின்!

அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று (ஜனவரி 5) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) மற்றும் ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை போன்ற அதிரடி அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையையும் அவர் நிறைவேற்றுவாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2009-ஆம் ஆண்டுக்கு முன் மற்றும் பின் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் சுமார் ரூ.16,000 வரையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாகும். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கோரிக்கை நிறைவேறும் வரை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தைத் தொடரப் போவதாக ஆசிரியர்கள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகங்களைச் சுத்தமாக வைத்திருத்தல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சத்துணவுக் கூடப் பராமரிப்பு குறித்துத் தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, மூன்றாம் பருவத்திற்கான விலையில்லாப் புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்களை மாணவர்களுக்கு முதல் நாளிலேயே வழங்க அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. ஆனால், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) சார்பில் சென்னையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம், இன்று மாவட்டத் தலைநகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "இனிமே தனி ரூட் இல்ல, கூட்டணி ஆட்சி தான்!" - 2026 தேர்தலுக்கு ஸ்கெட்ச் போட்ட திலகபாமா!

இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்துப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், "இடைநிலை ஆசிரியர்கள் எங்களது குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள்; நிதித்துறையுடன் ஆலோசித்து விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓய்வூதியக் குழுவின் அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து, அடுத்ததாக ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டும், வழக்குகளைச் சந்தித்த பின்னரும் தங்களது பிடியில் உறுதியாக உள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் அரசு உடனடியாகத் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் எனப் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் பொருளாதாரம்... அசாத்திய சாதனை..! மார்த்தட்டும் திமுக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share