“இந்தியாவின் தீய சக்தி பாஜக தான்! - மதுரையில் SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அதிரடி!
இந்தியாவின் மிகப்பெரிய தீய சக்தி என்றால் அது பாஜக தான் என்றும், தமிழக மக்கள் அறிவாளிகள் என்பதால் இங்கு மதவாத அரசியல் ஒருபோதும் எடுபடாது என்று நெல்லை முபாரக் சாடியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் பிரதிநிதிகள் நிச்சயமாகச் சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் எனத் தீர்க்கமாகத் தெரிவித்தார்.
மதுரையில் எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மகளிர் அணி சார்பில் ‘ஒவ்வொரு வீட்டிலும் என் வாழ்க்கை’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட மாநாடு இன்று நடைபெற்றது. மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் 2026 தேர்தல் வியூகங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.
அவர் பேசுகையில், "2026 சட்டமன்றத் தேர்தலில் 'ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய வாக்கு' என்கிற முழக்கத்தை இந்த மாநாட்டின் மூலம் முன்வைத்துள்ளோம். 2026-ல் வெல்வோம் என்ற இலக்கை நோக்கி எஸ்டிபிஐ கட்சி பயணிக்கத் தொடங்கிவிட்டது. வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிப்பது உறுதி. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா எனக் கேட்கிறார்கள்; எஸ்டிபிஐ அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. வரும் ஜனவரி இறுதியில் நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தான் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிட்வா புயலால் உருக்குலைந்த இலங்கை..!! நிவாரண நிதியை அறிவித்தது இந்தியா..!!
தொடர்ந்து பாஜக-வைச் சீண்டிய நெல்லை முபாரக், "இந்தியாவிலேயே மிகப்பெரிய தீய சக்தி என்றால் அது பாஜக தான். தமிழ்நாட்டில் அவர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தாமரை மலரவே மலராது. பீகாரோ, குஜராத்தோ தமிழ்நாடாக முடியாது. இங்குள்ள மக்கள் மதவாத அரசியலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தப் பார்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அங்குள்ள மக்கள் மாமன் மச்சான்களாக வாழ்ந்து வருகிறார்கள்; தர்காக்களை மீட்டெடுப்போம் எனப் பேசி மத நல்லிணக்கத்தைக் கெடுப்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கும் எவருக்கும் இந்த மண்ணில் இடமில்லை" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி: கோப்பையை வென்றது பாகிஸ்தான்!