சதுப்பு நிலத்தையும் விட்டு வைக்கல... ரூ. 2000 கோடி ஊழல்... விளாசிய சீமான்...!
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது தொடர்பான புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 14.7 ஏக்கர் நிலப்பரப்பில் பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் என்ற பெயரில் 1,250 ஆடம்பர குடியிருப்புகள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் போன்ற துறைகள் சட்டத்தை மீறி அனுமதி வழங்கியது தெரியவந்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2022 ஏப்ரலில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது என்றும் ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில், ஈரநிலங்கள் விதிகள், 2017இன் படி, எந்தவொரு நிரந்தரக் கட்டுமானமும் உறுதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை விதியைத் தமிழக அரசு அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் புறக்கணித்துள்ளனர் என்றும் கூறினார்.
இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பித்த நிறுவனம், தங்கள் நிலம் சதுப்பு நிலத்திலிருந்து 1.2 கி.மீ. தொலைவில் இருப்பதாகக் கூறியுள்ளது., ஆனால், அந்த நிலம் சதுப்பு நிலத்தின் உள்ளேயே இருப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறது என தெரிவித்தார். இதன் பின்னணியில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் கையூட்டு கைமாறியது என்றும் இது வெறும் நிர்வாக சீர்கேடா அல்லது திமுக அமைச்சர்களின் நேரடித் தலையீடா எனவும் இத்தனைக் கேள்விகள் எழுப்பப்பட்டப் பிறகும் முதலமைச்சர் அமைதிக்காப்பது பேரவலம் என்று கூறினார்.
அப்போதைய அமைச்சர் பொன்முடி தலைமையிலான வனத்துறை, இந்த ராம்சார் தளத்தைப் பாதுகாக்காமல் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது என்றும் ராம்சார் தளத்தை அறிவித்துவிட்டு மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் ஒன்றிய பாஜக அரசின் சுற்றுச்சூழல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது எனவும் தெரிவித்தார். சென்னையின் நுரையீரல் என்றும், வெள்ளத்தைத் தாங்கி நிற்கும் பாதுகாப்பு அரண் என்றும் போற்றப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, வெறும் பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்காகப் பலி கொடுக்க இந்த அரசு துணிந்திருப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கே இழைக்கப்பட்டிருக்கும் துரோகம் என சாடினார்.
இதையும் படிங்க: டீச்சரா? மிருகமா? சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய தலைமை ஆசிரியர்… சீமான் கடும் கண்டனம்…!
எனவே, அறப்போர் இயக்கம் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஈடுபாடு குறித்தும் எந்த பாகுபாடுமின்றி ஆய்வுசெய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பல கோடியில் சமாதி கட்டுறீங்க... நெல் சேமிப்பு கிடங்கு கட்ட முடியலையா? திமுக அரசை சாடிய சீமான்...!