நாதக வேட்பாளர் கார்த்திகா கைது! அதிகாரம் நிரந்தரமல்ல! முதல்வர் விஜய்க்கு சீமான் கடும் எச்சரிக்கை!
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நிலவுவதாகக் குற்றம்சாட்டிய சீமான், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.
சென்னை: தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
கார்த்திகா உள்ளிட்ட 7 பேர் கைது!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அக்கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர் சஞ்சய்காந்தி உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகாவின் கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட ஏழு கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் தங்களது கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனை எதிர்த்து கார்த்திகா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.
“இது மாற்று அரசியலா?” விஜய்க்கு கேள்வி
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நிலவுவதாகக் குற்றம்சாட்டிய சீமான், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.
மேலும், தவெக நிர்வாகிகள் மீதானதாகக் கூறப்படும் சில புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நாகையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“அதிகாரம் நிரந்தரமல்ல!”
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, முந்தைய ஆட்சிகளின் தவறுகளை மீண்டும் செய்வதாகச் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சி நிர்வாகத்தில் உள்ள பிரச்சினைகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
“இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ள சீமான், கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகா, அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி..!! அலுவலகத்திற்கு கூட வராத சீமான்.. கலக்கத்தில் தம்பிகள்!!