×
 

ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட கொலை.. சாட்டையை சுழற்றிய சீமான்..!

ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட படுகொலை என்று சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ரிதன்யாவிற்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல், தனது காரை ஓட்டிச் சென்று தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வழிபட்டுள்ளார்.   

தொடர்ந்து சாலையோரமாக காரை நிறுத்திய அவர், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா தன் அப்பாவுக்கு அனுப்பினார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: நின்னா வரி, நடந்தா வரி.. சோத்துக்கு கையேந்த வச்சு வயித்துல அடிக்க பாக்குறீங்களா? விளாசிய சீமான்..!

இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார்  ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  

இந்த சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல;  இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை என்று கூறியுள்ளார். 

மேலும் 27 வயதான புதுமணப்பெண் தங்கை ரிதன்யா வரதட்சணை கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும், தற்கொலை முன் பேசிய ஒலிப்பதிவுகளும் மனச்சான்றுள்ள ஒவ்வொரு மனிதரின் இதயத்தையும் நொறுங்க செய்தது என்றும் ரிதன்யா தற்கொலைக்கு காரணமான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது அரசியல் அழுத்தம் காரணமாக முறையாக பிரிவுகளின்கீழ் வழக்கு பதியவில்லை எனும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகள் மூவர் மீதும் எளிதில் பிணையில் வரக்கூடிய வழக்கு பதிந்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் கூறியுள்ளார். 

வரதட்சணை கொடுமைகளுக்கு உயிரிழந்த பெண்களில் தங்கை ரிதன்யாவின் மரணமே இறுதியானதாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ள சீமான், ரிதன்யாவின் மரணத்திற்கு காரணமான மூவர் மீதும் கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து, எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆட்படாமல் கடுந்தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழக காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: ஶ்ரீகாந்த் கைது.. சீமான் சொன்ன வார்த்தை..! விழிப்பிதுங்கிய முக்கிய தலைகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share