வெட்கக்கேடு, அவமானம்... விளம்பரம் தேவையா முதல்வரே? பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்ட சீமான்...!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி திமுக அரசை சீமான் சாடினார்.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாரபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மோகித் என்ற மாணவன் உயிரிழந்து உள்ளார். மதிய உணவு இடைவேளைக்காக நடைமேடைமீது அமர்ந்து மோகித் உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது இந்த எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்தது. சம்பவ இடத்திலேயே மோகித் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசுப்பள்ளிகளைத் தரப்படுத்தாமல் இன்னும் எத்தனை மாணவச்செல்வங்களை திமுக அரசு பலிகொடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுப்பினார். மோகித்தின் பெற்றோருக்கு தனது ஆறுதலை தெரிவித்த சீமான், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரசு பள்ளி சுவர்கள், மேற்கூரைகள் இடிந்து விழுவதும், பள்ளி மாணவ மாணவியர்கள் படுகாயம் அடைவதும் தொடர்கதையாகி விட்டதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்து 8ஆம் வகுப்பு படித்துவந்த 3 மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனே, வழக்கம்போல அனைத்து பள்ளிக்கூடங்களின் தரத்தையும் ஆராய ஒரு குழுவினை அமைத்தது திமுக அரசு என்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் அக்குழு ஆராய்ந்து அளித்த அறிக்கை எங்கே என்றும் அதன் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன., இடிந்து விழும் நிலையிலிருந்த எத்தனை தரமற்ற பள்ளி கட்டிடங்கள் இழுத்து மூடப்பட்டது., எத்தனை பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டன., மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பள்ளிகள் எத்தனை? என்ற கேள்விகளுக்கு திமுக அரசின் பதில்கள் என்ன என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: சீமானுக்கு விஜய் வைக்கும் செக்! விஜபி அந்தஸ்து பெரும் காரைக்குடி! காங். - பாஜக பலபரீட்சை!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை அரசு பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பி உள்ள சீமான், நூற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் மூடப்படுவது ஏன் என்றும் வெறும் 13,000 தனியார் பள்ளியில் 64 லட்சம் மாணவர்கள் படிப்பது எப்படி என்ற கேள்வியும் எழுப்பினார். ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று திமுக அரசு நடிகர்களை வைத்து வெற்று விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது என்றும் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளின் உறுதித்தன்மை குறித்து முறையாக ஆய்வுசெய்ய வேண்டும். நிபுணர் குழு அளிக்கும் தகுதிச் சான்றிதழை பெற்றுள்ள பள்ளி, கல்லூரிகளை மட்டுமே திறப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டுமெனவும், மாணவ கண்மணிகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கண்ணைக் காட்டிய ஸ்டாலின்... சீமானுக்கு காத்திருக்கும் செம்ம ஷாக்... நாதக தம்பிகள் தலையில் இடியை இறக்கிய திமுக...!