அது அரசா... தரிசா..? நாசமாகும் நெல்மணிகள்..! தவெகவை வெளுத்து வாங்கிய சீமான்..!
நெல்மணிகள் நாசமாவதாக சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வெற்றிக்கழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா., உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
அல்லும் பகலும் அயராது உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உடல்முழுவதும் உப்பு பூக்க, இரத்தத்தை வியர்வையாக்கி, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக் கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தேறியது என்று குறிப்பிட்டார்.
ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை என்றும் ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது? எனவும் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே இப்படியா?... விஜய் தலையில் இறங்கியது பேரிடி... கஞ்சா கடத்திய தவெக நிர்வாகி கையும் களவுமாக கைது...!
தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணம் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை., தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது இன்று சீமான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கரூர் அரசு வேலை விவகாரம்... மீண்டும் ஹை கோர்ட்டில் எதிர்ப்பு மனு..! விஜய் அரசுக்கு சவால்..!!