×
 
☰

ஈழத் தமிழர்களை நாடு கடத்துவதா.? இனவெறிக்கு ஆளாக்குவதா.? சீமான் சரமாரி கேள்வி..!!

ஈழத் தமிழர்களை நாடு கடத்துவதா என சீமான் கேள்வி எழுப்பினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி முகாமிலிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை இலங்கைக்கு நாடுகடத்தியதையும், சுபாஸ்கரனை நாடுகடத்த முயல்வதையும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.2016ஆம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மை என அவர் தெரிவித்தார்.

மற்றொரு தம்பி சுபாஸ்கரனையும் நாடுகடத்த முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.இலங்கையின் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்பால் வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து நிர்கதியற்ற நிலையில் தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, பாஜக அரசும் திமுக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி திருப்பி அனுப்புவது கண்டனத்துக்குரியது. முகாம்களில் அடிமைகள் போல அடைத்துவைத்தாலும் உயிர்ப்பாதுகாப்பு இருந்தது. இப்போது அதையும் பறித்து இனவாத நாட்டிற்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பாகும் என சீமான் குறிப்பிட்டார்.

பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து அடிப்படை உரிமைகளை உறுதி செய்து வாழ்வளிக்கின்றன. ஆனால் பத்து கோடி தமிழர்கள் வாழும் இந்நாட்டில் ஈழச்சொந்தங்களை சட்டவிரோதக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும். பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து வந்த இந்துக்களையும் திபெத்தியர்களையும் இவ்வாறு துரத்தாத இந்தியா, தமிழர்களிடம் மட்டும் அக்கறை காட்டாதது ஏன் என கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

இலங்கைக்கு துணைநின்று தமிழர்களை நாடற்றவர்களாக்கிய இந்திய அரசு, இப்போது அவர்களை துரத்துவது நியாயமற்றது. திமுக அரசு இதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழினத்திற்கு துரோகம் என சீமான் வலியுறுத்தினார். கிருஷ்ணகுமாரை இனவெறி அச்சுறுத்தலுக்குள் தள்ளியதுபோல சுபாஸ்கரனையும் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க: இதுதான் ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் முறையா.? சொல்லுங்க CM.? காவல்துறை கொடிநாள்.. கொந்தளித்த சீமான்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share