உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!
தூத்துக்குடியில் உப்பளங்கள் அழித்து கப்பல் கட்டும் தளம் உருவாக்கப்படுவதாக சீமான் கண்டனம் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் 38,000 கோடி ரூபாய் முதலீட்டில் தென்கொரிய நிறுவனம் மூலம் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என அவர் தெரிவித்தார். கப்பல் கட்டும் தளம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வது கொடுங்கோன்மை என சீமான் குற்றம்சாட்டினார்.
வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் நிலங்கள், உப்பளங்கள், மீன்பிடி தளங்கள், கடற்கரைகள், மக்கள் குடியிருப்புகள், நீர்நிலைகள், ஆறுகள், அருவிகள், காடுகள், மலைகள் என இயற்கை வளங்களையும் பாரம்பரிய தொழில்களையும் அழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கொடுஞ்செயல் என அவர் சுட்டிக்காட்டினார். வேளாண்மை முதல் உப்பளங்கள் வரை நாட்டின் பாரம்பரிய தொழில்களை அழித்துவிட்டு எதை வளர்க்கப் போகிறீர்கள், அடுத்த தலைமுறைக்கு என்ன கையளிக்கப் போகிறீர்கள், அவர்களுக்கு உணவாக எதைத் தரப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
தற்போது தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தளம் அமைக்க முயல்வது ஏன் என கேள்வி எழுப்பினார். அரசு, ஆட்சி, அதிகாரம், தொழில், வளர்ச்சி அனைத்தும் மக்களின் நல்வாழ்வுக்காகவே உருவாக்கப்பட்டவை. தொழிற்சாலைகள் இன்றி மக்கள் வாழ முடியும். ஆனால் மக்கள் இன்றி எந்தத் தொழிற்சாலையும் இயங்காது. மக்களை அழித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைகள் வரலாற்றில் கொடிய கல்லறைத் தோட்டங்களாகவே மாறும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: உட்காரும் இடத்தில் உறுத்துதா? இவங்களுக்கு எதுக்கு சுதந்திரம்.? முதல்வருக்கு சீமான் காட்டமான கேள்வி..!
எனவே தூத்துக்குடியில் பாரம்பரிய உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசும் தமிழக அரசும் உடனடியாக கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்தார். இல்லையெனில் பாதிக்கப்படும் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: நாதக வேட்பாளர்கள் யார் யார்?.. இன்று அறிவிக்கிறார் சீமான்.! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!