மின்வெட்டு ஒரு பக்கம்… ₹35 மின்சாரம் மறுபக்கம்! TVK அரசுக்கு சீமான் கண்டனம்..!!
மின் கொள்முதல் விவகாரத்தை சுட்டிக்காட்டி சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தை சுமார் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளதை கடுமையாகக் கண்டித்துள்ளார். அரசின் சொந்த மின் உற்பத்தி திட்டங்களை வலுப்படுத்தாமல் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று அவர் கூறினார்.
மக்களிடம் ஏற்கனவே பன்மடங்கு அதிகமாக மின்கட்டணம் வசூலித்து வரும் நிலையில், 35 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கினால் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகக் கட்டணத்தை உயர்த்தப்போகிறீர்கள் என்றும், மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் இரண்டு லட்சம் கோடிகள் அளவிற்கு கடனில் மூழ்கியுள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் கடன் அதிகமாகும் என்றார். உற்பத்தியில் முதலீடு செய்வதுதான் நிலையான தீர்வு என்றும், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது என்றும் கேட்டார்.
சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களில் அரசு கவனம் செலுத்தாதது ஏன் என்று அவர் வினவினார். தேர்தல் பரப்புரையின்போது கையூட்டுக்காக திமுக அரசு தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்குவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் விஜய், இன்று தனது ஆட்சியில் அதைவிட அதிக விலை கொடுத்து வாங்குவது யாரிடம் கையூட்டு வாங்க என்று சீமான் கேள்வி எழுப்பினார். 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் ஓர் அலகு 4.85 ரூபாய் முதல் 5.85 ரூபாய் வரை வாங்கப்பட்டதாகவும், அவசரத் தேவைக்காக 21 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வாங்கியபோது எதிர்த்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார். தற்போதைய விலை பன்மடங்கு அதிகம் உயர்ந்துள்ளதற்கு நியாயத்தை மக்களிடம் விளக்க தவெக அரசு தயாரா என்று கேட்டார்.
இதையும் படிங்க: "அதிமுகவில் இருந்து வருவார்கள் 15 எம்எல்ஏக்கள் வருவார்கள் என சொல்லவில்லை” - அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்...!
தவெக ஆட்சிக்கு வந்து கடந்த ஐந்து மாதத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக மக்கள் அல்லல்படும் நிலையில், 35 ரூபாய் கொடுத்து வாங்கினால் மேலும் எத்தனை மடங்கு உயர்த்தி மக்களை வதைக்கப்போகிறீர்கள் என்றும், மின்தேவையை முன்கூட்டியே கணித்து ஏற்பாடு செய்வது அரசின் அடிப்படைக் கடமை அல்லவா என்றும் அவர் கேட்டார். அரசின் மின் நிலையங்களில் உற்பத்தித்திறன், பயன்படுத்தப்படும் திறன், முழுமையாக உற்பத்தி செய்ய முடியாத காரணங்கள் குறித்து விளக்கம் கேட்ட அவர், தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது என்றார்.
மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும், அவசரத் தேவையைக் காரணமாக்கி எந்த விலையிலும் வாங்கலாம் என்பதை ஏற்க முடியாது என்று சீமான் தெரிவித்தார். கொள்முதல் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது, எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது, மொத்தக் கூடுதல் செலவு எவ்வளவு என்பன உள்ளிட்ட விவரங்களை தவெக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார். இந்தக் கூடுதல் செலவை மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில் சுமத்தப் போகிறீர்கள் என்றும், அரசின் திட்டமிடல் குறைபாட்டிற்காக எளிய மக்களும் விவசாயிகளும் சிறு தொழில்முனைவோரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டுமா என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: அக்டோபர் மட்டுமே..! மின் கொள்முதல் சர்ச்சை..!! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!