ஜெயில்ல போட்டாலும் பிரச்சனை இல்ல.. தடையை மீறி போராடுவேன்.. சீமான் திட்டவட்டம்..!
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த அனுமதி மறுத்தாலும் தடையை மீறிப் போராடுவோம் என சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இரட்டைமலை சீனிவாசனின் 166-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை சீமான் முன் வைத்தார். இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளை பறையர் எழுச்சி நாளாக அரசு அறிவித்து போற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அல்லது நாங்கள் பறையர் எழுச்சி நாளாக கொண்டாடுவோம் என்றும் இதனை வலியுறுத்தி பெரும் கையெழுத்து இயக்கத்தை இந்த நாளில் தொடங்கி இருக்கிறோம் எனவும் கூறினார்.
1785 முதல் 1895 வரை நடத்தப்பட்ட பூந்தமல்லி பறையர் புரட்சியை இந்திய சுதந்திர போராட்டமாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தாரை தேசக்காப்பாளர்களாக அறிவித்து பெருமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்திய அரசு நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பில் ஆதிதிராவிடர் என்ற சொல்லாடலை அரசாணை மூலம் நீக்கி அனைவரையும் பறையர் என்ற ஒற்றை சொல்லில் கணக்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். பறையா ஸ்டேட், குளோபல் பறையா போன்ற வார்த்தைகள் மூலமாக பறையர்களை இழிவுபடுத்தும் போக்கை அனைத்து நாட்டினரும் கைவிட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் அவையில் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார். பறையா என்ற சொல்லாடலை ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் ஆங்கில அகராதியில் பயன்படுத்தப்படுவதை நீக்க வேண்டும்., அத்தகைய அகராதியை தடை செய்ய வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கை என தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் ஆங்கில அகராதியில் தமிழர்கள் என்றாலே மலிவான கூலி என்றுதான் எழுதி இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: சீமான் மீது டிஐஜி வருண் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இடைக்கால தடை விதிப்பு.. கோர்ட் தடாலடி!
தொடர்ந்து பேசிய சீமான், பள்ளி கல்லூரி விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது, சமூக நீதி என்றால் என்ன என்பதை விளக்கி சொல்லிவிட்டு சமூக நீதி என்ற பெயர் வைப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை என்றும் எந்த சாதியின் அடிப்படையில் நான் இழிவு படுத்தப்பட்டேனோ, அதே சாதியின் அடிப்படையில் அவையெல்லாம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதுதான் இடபகிர்வு என்றார்கள், அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடத்தை பகிர்ந்து கொடு., அள்ளிக் கொடுக்காதே... அளந்து கொடு., எடுத்துக் கொடுக்காதே...எண்ணிக்கொடு., என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. இதுதான் சமூக நீதிப் கோட்பாடாக இருக்க முடியும். இல்லையென்றால் அது விற்று வார்த்தையாக மாறிவிடும் என்றார்.
தமிழ் குடியைச் சேர்ந்தவர்கள் வெறும் இரண்டு அமைச்சர்கள் தான். ஆனால் ஒரே வீட்டில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருக்கிறார்கள். இது தான் சமூக நீதியா என கேள்வி எழுப்பினார். அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு நாளை நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என்றும் அனுமதி மறுத்தாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்றும் அதற்காக சிறையில் அடைத்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் காட்டாற்று வெள்ளத்தை தற்கொலை கொண்டு தடுக்க முடியுமா எனவும் சீமான் தெரிவித்தார். தங்களிடம் காட்டும் நேர்மையும் அஜித்குமார் விசாரணையில் காட்டி இருக்க வேண்டும் என்றும் சீமான் கூறினார்.
இதையும் படிங்க: நின்னா வரி, நடந்தா வரி.. சோத்துக்கு கையேந்த வச்சு வயித்துல அடிக்க பாக்குறீங்களா? விளாசிய சீமான்..!