அறநிலையத்துறையை வேவு பார்க்கிறார் சேகர்பாபு! அமைச்சர் ரமேஷ் அதிரடி குற்றச்சாட்டு!
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறையை வேவு பார்த்து வருகிறார் என அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாகவும், துறை சார்ந்த சில அதிகாரிகள் அவருக்கு ரகசியமாகத் தகவல்களைக் கசியவிட்டு வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ரொம்ப அறிவாளித்தனமாக நடுராத்திரி 12 மணிக்கு அறிவை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு திமுகவினர் தொடர்ச்சியாகப் பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ், தன் மீது எவ்விதத் தவறும் இல்லை எனக் கூறிவரும் சேகர்பாபு, கடந்த காலத் தவறுகள் வெளிவந்துவிடுமோ என்ற கடுமையான பயத்தின் காரணமாகவே இத்தகைய வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டார். துறை ரீதியாக ஏதேனும் முறைகேடுகள் அல்லது தவறுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு எவ்வித பாரபட்சமுமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டமன்றமே ரீல்ஸ்-க்காக நடத்தப்படுகிறதா? தவெக அரசை விளாசிய கனிமொழி எம்பி!
மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர், தற்போதைய அரசில் உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்குவதால் அனைத்துக் கட்சிகளின் குரல்களுக்கும் உரிய இடமும் அவகாசமும் அளிக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்பட்டது; ஆனால் இன்று சட்டப்பேரவையில் சில முன்னாள் அமைச்சர்கள் சபையின் மாண்பைக் குலைக்கும் வகையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசி வருகின்றனர்" எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், முதலமைச்சரை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளுக்குத் துறை அமைச்சர்கள் உரிய விளக்கங்களை முன்வைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை என்றும், திமுகவின் வீண் அவதூறுகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “என்னை ஓரங்கட்டுகிறார்கள்!” சட்டசபையில் ஆனந்த் கொட்டித் தீர்த்தது ஏன்? தவெக வட்டாரத்தில் பரபரப்பு