ஆட்சியில் பங்கு ஒத்து வராது...! முதல்வர் கருத்தால் கூட்டணிக்குள் பிளவா? செல்வப் பெருந்தகை ஓபன் டாக்...!
ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து தொடர்பாக செல்வப் பெருந்தகை பதிலளித்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள சில கட்சிகள் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற கோரிக்கையை முன்வைத்து பேசி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் இதை மிகவும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இப்போது 40 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை எதிர்பார்ப்பதோடு, வெற்றி பெற்றால் அமைச்சரவையில் சில பதவிகளைப் பெற வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
இது திமுகவுக்கு புதிய சவாலாக எழுந்துள்ளது. இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அண்மையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இதே கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளார். ஆட்சியில் பங்கு என்ற கூட்டணி கட்சியினரின் கோரிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தை பொறுத்தவரை ஒத்து வராது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளது என்றும் கட்சியின் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து திமுக தலைமை மற்றும் காங்கிரஸ் தலைமை கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் என்று கூறினார். தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறி இருப்பதாகவும் இதனால் கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது என்றும் செல்வபெருந்ததை தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒத்து வராது என முதலமைச்சர் அளித்த பேட்டி தொடர்பான கேள்விக்கு செல்வப் பெருந்தகை இவ்வாறு பதிலளித்தார்.
இதையும் படிங்க: ராமதாஸ் - விசிக பற்றி செல்வப் பெருந்தகை பேசினாரா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம்..!
முதல்வரின் கருத்தால் திமுக கூட்டணி, தொகுதி பங்கேடு பேச்சு வார்த்தையில் பிரச்சனை ஏற்படாது என்றும் திட்டவட்டமாக கூறினார். பிளவு படுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்றுதான் பேசுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள் என்றும் விமர்சித்தார். காங்கிரஸ் யாரிடம் எந்த கலக்கமும் இல்லை என தெரிவித்த செல்வ பெருந்தகை நாங்கள் இந்த மண்ணை நேசிப்பவர்கள் என்றும் விரைவில் முதலமைச்சரை சந்திப்போம் என்றும் கூறினார். மேலும் மாணிக்கம் தாகூர் தொடர்பான கேள்விக்கு கட்சிக்குள் உள்ள பிரச்சனையை நாங்கள் பேசி தீர்வு காண்போம் எனவும் பதிலளித்தார்.
இதையும் படிங்க: பார்லிமென்ட்டில் ராகுல் பேச தடை... உரிமையை பறிப்பது நியாயமா? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!