×
 

மு.க.ஸ்டாலின் திட்டத்திற்கு தவெக செக்! செம்மஞ்சேரி ஸ்போர்ட்ஸ் சிட்டி பணி ஆணை ரத்து! அரசு விளக்கம்!

கடந்த பிப்ரவரி மாதம் பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், ஆரம்பகட்ட களப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மண் பரிசோதனை, நில ஆய்வு மற்றும் நிலத்தை சமன்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை அருகே செம்மஞ்சேரியில் உருவாக்கப்பட இருந்த சர்வதேச விளையாட்டு நகரத்தின் ரூ.205.89 கோடி மதிப்பிலான பணி ஆணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், விளையாட்டு நகரத் திட்டமே கைவிடப்படவில்லை. மாறாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அளவைவிட மிகப்பெரியதாகவும், சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தும் வகையிலும் புதிய வடிவமைப்பை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில் சுமார் 112 ஏக்கர் பரப்பளவில் இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. நீண்ட காலமாக சட்டப் பிரச்னையில் இருந்த அரசு நிலத்தின் ஒரு பகுதி கடந்த திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் பிரம்மாண்ட விளையாட்டு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கால்பந்து, தடகளம், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், படகுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான வசதிகள், பயிற்சி மையங்கள், உள்விளையாட்டு அரங்குகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிடங்கள் உள்ளிட்டவை திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. மேலும், எதிர்காலத்தில் அந்தப் பகுதியை மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுடன் இணைக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பெண்கள் கவனத்திற்கு! இலவச பஸ் பயண திட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றம்! அரசின் அடுத்த அதிரடி திட்டம்!

இந்தத் திட்டத்திற்கான வடிவமைப்பு, பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆர்.பி.பி. இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.205.89 கோடி மதிப்பில் பணி ஆணை வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், ஆரம்பகட்ட களப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மண் பரிசோதனை, நில ஆய்வு மற்றும் நிலத்தை சமன்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்தத் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டது. கிடைக்கும் 112 ஏக்கர் நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்ற மிகப்பெரிய தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தக்கூடிய வகையில் திட்டத்தை மறுவடிவமைக்க முடிவு செய்யப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆர்.பி.பி. இன்ஃப்ரா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.205.89 கோடி பணி ஆணையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கெனவே தொடங்கிய பணிகளையும் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் வருமா, வராதா என்ற கேள்வி எழுந்தாலும், தற்போதைய தகவல்படி திட்டத்தை கைவிடுவதற்கு பதிலாக இன்னும் பெரிய மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு நகரமாக மாற்றுவதே அரசின் நோக்கம் எனத் தெரிகிறது. புதிய வடிவமைப்பு மற்றும் அதற்கான அடுத்த கட்ட ஒப்பந்த நடைமுறைகள் எப்போது தொடங்கும் என்பது இனி கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது.

இதையும் படிங்க: சென்னைக்கு வருகிறது 840 டன் வெங்காயம்! கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு அதிரடி! விலை உயர்வுக்கு செக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share