×
 

தவெகவில் அடுத்தடுத்து அவமானங்களால் செங்கோட்டையன் அப்செட்!! எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?!

த.வெ.க., தேர்தல் பிரசாரக் குழுவில், செங்கோட்டையனுக்கு மூன்றாம் இடம் வழங்கப்பட்டிருப்பது, அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரசார குழுவை அறிவித்துள்ள நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான கே.ஏ. செங்கோட்டையன்க்கு மூன்றாம் இடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கோட்டையன் தற்போது கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகவும், தேர்தலுக்கு முன் வேறு கட்சிக்கு செல்லும் யோசனைக்கு வந்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதிமுகவில் பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஓரம் கட்டப்பட்ட செங்கோட்டையன், கடந்த நவம்பர் 2025-ல் த.வெ.க.வில் இணைந்தார். அப்போது கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: சீனியர் செங்கோட்டையன் மிஸ்ஸிங்!! Why Bro?! தவெக தேர்தல் அறிக்கை குழுவால் சர்ச்சை!!

ஆனால் தற்போது தேர்தல் பிரசார குழுவில் பொதுச்செயலர் ஆனந்த் முதல் இடத்திலும், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா இரண்டாம் இடத்திலும், செங்கோட்டையன் மூன்றாம் இடத்திலும் உள்ளார். இது அவருக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறுகையில், அதிமுகவில் இருந்து வெளியேறிய பிறகு திமுகவில் சேர முடிவு செய்திருந்த செங்கோட்டையனை ஆதவ் அர்ஜுனா சந்தித்து த.வெ.க.வில் இணைய வைத்தார். ஆனால் கட்சியில் சேர்ந்த பிறகு பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். 

ஈரோடு மாவட்டச் செயலரை அழைத்தபோது போன் எடுக்கவில்லை. பின்னர் ஆனந்த் மூலமாகவே தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. "தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை. எந்த மாவட்டச் செயலருடனும் பேச வேண்டுமானால் ஆனந்த் அனுமதி வேண்டும்" என்று கூறப்பட்டதாக செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பனையூர் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பற்றி பேசியபோது, வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி "இங்கு எல்லாம் விஜய் தான்; எம்.ஜி.ஆர். புராணம் தேவையில்லை" என்று குறுக்கிட்டதாகவும் கூறப்படுகிறது. 

கரூர் விவகாரம், சிபிஐ சம்மன், ஜனநாயகன் பட சர்ச்சை குறித்து பேசியபோது "டில்லியில் பாஜக தலைவர்களிடம் செல்வாக்கு உண்டு, சரி செய்யலாம்" என்று செங்கோட்டையன் கூறியதற்கு தலைவர்கள் "நீங்கள் கொஞ்சம் வெளியில் இருக்கிறீர்களா?" என்று சொல்லி வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிமுகவில் இருந்து தன்னுடன் வந்த ஆதரவாளர்களுக்கு பொறுப்பு கேட்டு பட்டியல் கொடுத்தும் கிடப்பில் போடப்பட்டது. விஜயை சந்திக்க 4 முறை பனையூர் அலுவலகத்துக்கு சென்றும் "விஜய் அழைத்தால் மட்டும் வாருங்கள்" என்று அனுப்பப்பட்டார். பட்டினப்பாக்கம் வீட்டுக்கு சென்றபோதும் அனுமதி மறுக்கப்பட்டது. "முன் அனுமதி இல்லாமல் வருவது நாகரிகமல்ல" என்று கூறப்பட்டது.

இதேபோல அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சில தலைவர்களை சென்னைக்கு வரவழைத்தும் சேர்க்க அனுமதி கிடைக்கவில்லை. அவர்கள் செங்கோட்டையன் மீது அதிருப்தியுடன் ஊர் திரும்பினர். இப்படி தொடர் ஏமாற்றங்களால் செங்கோட்டையன் கடும் புழுக்கத்தில் உள்ளார். இந்நிலையில் பிரசார குழுவில் 3-ஆம் இடம் வழங்கப்பட்டது அவருக்கு கடைசி அடியாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: இது தமிழ்நாடு... பாஜகவுக்கு வாய்ப்பே இல்ல... செங்கோட்டையன் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share