×
 

ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் செந்தில்பாலாஜி!! கோர்ட் உத்தரவால் கிடைத்தது மகிழ்ச்சி!

கோவை தெற்கு எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மனுதாரருக்கு சட்டப்படி அந்த வழக்கை தொடரும் தகுதி இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி, தவெக வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவை எதிர்த்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. மனுதாரர் கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த வாக்காளரும் அல்ல, அந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும் அல்ல என்பது நீதிமன்றத்தில் தெரியவந்தது.

இதையும் படிங்க: கரூர்ல நடந்தது என்ன? உதவியது யார்? ஓடியது யார்?! முதல்வர் விஜய்க்கு செந்தில்பாலாஜி பதிலடி!

இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 81-வது பிரிவின்படி, ஒரு தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர உரிய சட்டத் தகுதி அவசியம் என நீதிபதி சுட்டிக்காட்டினார். எந்தத் தொகுதியைச் சேர்ந்தவராக இல்லாத ஒருவர் தேர்தல் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டால், ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலை உருவாகும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த மனுதாரர் பிரகாசம், கோவை தெற்கு தொகுதியின் வாக்காளரோ அல்லது வேட்பாளரோ இல்லாததால், அவர் தாக்கல் செய்த தேர்தல் மனு சட்டப்படி ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து, செந்தில்பாலாஜியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பின் மூலம், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரும் நபர்களின் சட்டத் தகுதி தொடர்பாக உயர்நீதிமன்றம் முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கு!! 2 மருத்துவர்களிடம் தீவிர விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share